

உடுமலை: உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கடந்த சில நாட்களாக திருமூர்த்தி மலை சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது.
நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை கனமழை பெய்தது. இதனால், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை, காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறும் போது,‘‘கன மழை பெய்ததால், அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னதாக, கோயிலில் வைக்கப்பட்டிருந்த 20 உண்டியல்களையும் தார்ப் பாய்கள் கொண்டு மூடிவிட்டோம். பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவும், அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும்,தடை நீக்கப்படும்’’ என்றனர். இதேபோல ராவணாபுரத்தை அடுத்த காண்டூர் கால்வாய் பகுதியில் உள்ள மத்தள ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.