

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அன்னதானம், திருப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு விரைந்து பணம் செலுத்தும் குறியீடு ( ‘க்யூ ஆர் கோடு’) மூலம் நன்கொடை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மூலம் மாதந்தோறும் ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இது தவிர, கோயில் திருப்பணிகள், அன்னதானம் மற்றும் பொதுப் பணிகளுக்கு பக்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்குகின்றனர். தற்போது நாடு முழுவதும் யுபிஐ, கூகுள் பே, போன் பே உள்ளிட்டவை மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகளவில் நடக்கிறது.
அதன்படி, பழநியில் பக்தர்கள் நன்கொடையை விரைந்து பணம் செலுத்தும் குறியீடு மூலம் ஸ்கேன் செய்து வழங்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, பழநி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தண்டபாணி நிலையம் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில் இந்த விரைந்து பணம் செலுத்தும் குறியீடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் ஸ்கேன் செய்து, தாங்கள் நன்கொடையாக அளிக்க விரும்பும் தொகையைச் செலுத்தலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், தேவஸ்தானம் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம், பூஜை பொருட்களை வாங்குவதற்கும், கட்டண தரிசனச் சீட்டு பெறுவதற்கும் கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.