

திருச்சி: திருச்சி மாவட்டம் குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதையொட்டி திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள பழமையும், சிறப்பும் வாய்ந்த முருகன் தலங்களில் திருச்சி குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலும் ஒன்று. அருணகிரிநாதரால் பாடல்பெற்ற சிறப்பு வாய்ந்தது இந்தத் தலம். இக்கோயிலில் 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தற்போது குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு, 12.2.2023 அன்று பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை நிதி மற்றும் உபயதாரர்களின் நன்கொடை ஆகியவற்றின் மூலம் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் பழுது நீக்கும் பணிகள் 75 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள்ளே போடப் பட்டிருந்த மார்பிள் தரைத்தளங்கள் உடைத்து எடுக்கப்பட்டு, கருங்கல் தளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்ணம் பூசும் பணிகள் நடைபெறவுள்ளன. சேதமடைந்த நிலையில் இருந்த முன்மண்டபத்தை முழுமையாக அகற்றிவிட்டு, நன்கொடையாளர் மூலம் ரூ.2 கோடியில் புதிய முன் மண்டபம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் எஸ்.அருண் பாண்டியன், அறங்காவலர் குழுத் தலைவர் பி.ரமேஷ் ஆகியோர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் பல்வேறு குழுக்களிடம் உரிய அனுமதி பெறப்பட்டு, திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கோயிலின் உள்ளே உள்ள பைரவர் சந்நிதி மற்றும் நவக்கிரஹங்கள் ஆகியவற்றை ஆகம விதிப்படி மாற்றி அமைப்பதற்கு அறநிலையத் துறையிடம் அனுமதி பெறப்படவுள்ளது. திருப்பணிகளை முழுமையாக முடித்து ஆவணி மாதம் குடமுழுக்கு நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர். இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் பழுதுநீக்கும் பணி கள் 75 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன.