Last Updated : 08 Jan, 2024 05:13 AM

 

Published : 08 Jan 2024 05:13 AM
Last Updated : 08 Jan 2024 05:13 AM

ஆண்டாள் திருப்பாவை 23 | நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும்!

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,
போதருமாப் போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் போற்றத்தக்க அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. இப்பாசுரத்தில் கண்ணன் சிங்கத்துடன் ஒப்பிடப்படுகிறான். சிங்கத்தால் தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டு எதிரியுடன் போரிட முடியும். இரணியனை கோபப் பார்வை பார்த்த பெருமாள், அதே நேரத்தில் பிரகலாதனை அருட்பார்வையால் நோக்கினார்.

பாவை நோன்பு இருக்கும் பெண்கள், ‘மழைக் காலத்தில், குகைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆண் சிங்கம் பிடரியை சிலுப்பிக் கொண்டு கர்ஜனை செய்து வெளியே வரும். அத்தகைய ஆண் சிங்கத்தைப் போன்று நீ உடனே புறப்படு கண்ணா! உனது சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து, நாங்கள் எதற்காக வந்து காத்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள். சற்றும் தாமதம் செய்யாமல் அருள் புரிவாய்!’ என்று கண்ணனை வேண்டுகின்றனர்.

இறைவன் மீது பக்தி கொண்டு வேண்டுபவர்கள் அனைவரும், ‘பொன் வேண்டும், பொருள் வேண்டும், வீடு வேண்டும், நகை வேண்டும்’ என்று அவனிடம் கோரிக்கை வைப்பதுண்டு. நியாயமான கோரிக்கைகளையே இறைவன் முன் வைக்க வேண்டும். நமக்கு, கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால், நம் உழைப்புக்கு ஏற்ப, அவை நமக்கு இறைவனால் அருளப்படும். ஆனால் ஆயர்குலப் பெண்கள், கண்ணனிடம் தங்களுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல், அவனையே கேட்கின்றனர். அவர்கள் கண்ணன் என்ற பேரின்பத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x