Published : 03 Jan 2018 10:36 AM
Last Updated : 03 Jan 2018 10:36 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 19

குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

சொத்தலர் பூங்குழல் நப்பன்னைகொங்கை மேல்

வைத்துக்கிடந்த மால்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனைப்போதும் துயிலெழவொட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவமென்று தகவேலோ ரெம்பாவாய்!

அதாவது, முந்தைய பாடலில் நப்பின்னையை எழுப்பினாள் ஆண்டாள். கதவைத் திறக்கவொட்டாமல், கண்ணன் அவளை இழுத்தணைத்து கதவைத் திறக்க வேண்டாம் என ஜாடை காட்டுகிறான் என்று நினைத்து ஆண்டாள் இந்தப் பாடலைப் பாடுகிறாள்.

கண்ணபிரானின் படுக்கையறையில், குத்துவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. கண்ணனின் அழகான மணிமாலைகள், அணிந்துள்ளான். கம்சனுடைய பட்டத்துயானையான குவாலயபீடம் எனும் யானையைக் கொன்றூ (தன்னை அழிக்க ஏவப்பட்டதால்), அதன் கொம்புகளை அதாவது யானையின் தந்தங்களைக் கொண்டு, கால்களாக அமைத்த கட்டில் இது!

பஞ்சு, பட்டு, மென்மையான கம்பளம், மலர், தளிர் ஆகிய ஐந்து பொருட்களைக் குறித்த அளவோடு நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவை ஐந்தும் அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமளம், வெண்மை என ஐந்து குணங்கள் கொண்டது. எனவே, பஞ்சசயனம் எனப் பெயர் பெற்றது.

அவ்வாறு பஞ்ச சயனத்தில் கண்ணபிரான், உறங்குகிறான். நம்பின்னையே! நீ அவனுடன் படுத்திருக்கிறாய். நாங்கள் அனைவரும் மையிட்டெழுதோம் என மை தீட்டிக் கொள்வதில்லை. மலரிட்டெழுதோம் என மலர்களை சூடிக் கொள்வதில்லை. கண்ணனை நோக்கி நோன்பு இருக்கிறோம். ஆனால் நீயோ, கண்ணனின் அருகில் இருப்பதால், கொத்தான மலர்களை சூடிக்கொண்டிருப்பவளே! மை தீட்டிய அகன்ற கண்களை உடையவளே! நப்பின்னையே! விடிந்து வெகுநேரம் ஆகிவிட்டபடியால், நீ சிறிது நேரம், கூட கண்ணனைப் பிரிந்திருக்க மாட்டாயோ. உடனே எழுந்து எங்களது வேண்டுதலுக்கு மனமிரங்கி கதவைத் திறப்பாயாக! என்று பாடுகிறாள் ஆண்டாள்.

இந்தத் திருப்பாவைப் பாடலை, திருமாலை நினைத்து மனமுருகப் பாடுங்கள். மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். மங்காத செல்வம் இல்லத்தில் குடிகொள்ளும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x