Last Updated : 11 Jan, 2018 11:35 AM

 

Published : 11 Jan 2018 11:35 AM
Last Updated : 11 Jan 2018 11:35 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: உன் நம்பிக்கையோ சிறியது

 

யேசுவுக்கு யோர்தான் நதியில் திருமுழுக்குக் கொடுத்த தீர்க்கதரிசி யோவானை, கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது கொலை செய்தான். யோவானின் உடலைப்பெற்று அடக்கம் செய்த அவரது சீடர்கள், யோவான் கொல்லப்பட்ட செய்தியை இயேசுவிடம் வந்து கூறினார்கள். யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு மிகவும் மனம் வருந்தி, யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். இயேசு, புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர்.

எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்துக்கு அவர்கள் தரை வழியே சென்றனர். இயேசு அங்கு வந்து சேர்ந்தபோது, ஏராளமான மக்கள் தனக்கு முன்பாக அங்கே வந்து குழுமியிருப்பதைக் கண்டார். அவர்களுக்காக மனமிறங்கிய இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார்.

நீங்களே அவர்களுக்கு உணவளியுங்கள்

அன்று பிற்பகல், இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, “மனிதர்கள் யாரும் இந்த இடத்தில் வசிக்கவில்லை. இன்னும் ஒருமணி நேரத்தில் பொழுதும் சாய்ந்துவிடும். எனவே மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று வீடுகளை அடையமுடியும். அவர்களுக்கான உணவும் பிரச்சினையாக இருக்காது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு, “ மக்களை உடனே இங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள் என நீங்கள் கூறவேண்டிய அவசியமில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.

அதற்குச் சீடர்கள், “ஆனால், நம்மிடம் ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள். உடனே இயேசு, “அந்த ரொட்டிகளையும் மீன்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். ஐந்து ரொட்டிகளும் இரண்டு மீன்களும் இருந்த பரிமாறும் தட்டுக்களைக் கையிலெடுத்து உயர்த்திப் பிடித்த இயேசு, வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காகத் தந்தைக்கு நன்றி கூறிப் பிரார்த்தனை செய்தார். பின்னர் அந்த ரொட்டிகளில் ஒன்றை எடுத்து பகிர்ந்து உண்பதின் அடையாளமாக அதைச் சரிசமமாகப் பிய்த்துத் தட்டில் வைத்தார்.

பின்னர் அந்தத் தட்டுகளை தரையில் வைத்தபோது அவை நிறைந்திருந்தன. அங்கே நிகழ்ந்ததைக் கண்ட சீடர்கள் மக்களுக்கு பரிமாறத் தொடங்கினார்கள். மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். முதியவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று அங்கே திரண்டு வந்திருந்த சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். அவர்கள் உண்டு முடித்தது போகப் பரிமாறும் தட்டுகளில் மீதியிருந்த ரொட்டித் துண்டுகளை பன்னிரெண்டு கூடைகள் நிறைய சீடர்கள் சேகரித்தார்கள்.

பேதுருவின் நம்பிக்கை

பிறகு இயேசு தமது சீடர்களைப் படகில் ஏறச் சொன்னார். தான் பின்னர் வருவதாகக் கூறி தனக்கு முன்பு ஏரியின் மறுகரைக்குப் படகை செலுத்தும்படி கூறினார். பின்னர் வருவதாக மக்களிடம் கூறி விடை பெற்றுக்கொண்ட இயேசு, அவர்களை அனுப்பிய பின்பு ஒரு குன்றின்மீது ஏறினார். தனியே பிரார்த்தனை செய்வதற்காக இயேசு அங்கு சென்றார். அச்சமயம் சீடர்கள் புறப்பட்டுச்சென்ற படகு ஏரியில் வெகு தொலைவு சென்றிருந்தது. அப்போது ஏரியில் பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இதனால் படகு அலைகளினால் கடும் தள்ளாட்டத்துக்கு உள்ளானது. படகு சென்ற திசைக்கு எதிராகக் கடும் சூறைக் காற்று வீசியதால் சீடர்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாயினர்.

அதிகாலை, மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிவரை இயேசுவின் சீடர்கள் காற்றின் அலைக்கழிப்பால் படகிலேயே இருந்தனர். அப்போது இயேசு தண்ணீரின்மேல் நடந்து அவர்களிடம் வந்தார். தண்ணீரின் மேல் அவர் நடந்துவருவதைக் கண்ட சீடர்கள் மிகவும் பயந்து நடுங்கினார்கள். “அது நிச்சயமாக ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே இயேசு அவர்களிடம், “பயப்படாதீர்கள் நான் தான். உங்கள் போதகர்தான்” என்று கூறினார். படகிலிருந்து சிறிது தூரத்தில் தண்ணீரின்மேல் இயேசுவைக் கண்டு பயம் தெளிந்த பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம் “வா, உன்னால் முடியும் பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தார். ஆனால், தண்ணீரின்மேல் சில அடிகள் நடந்து சென்றபொழுது காற்றடிப்பதையும் அலைகள் புரள்வதையும் கண்டார். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்கித் தத்தளிக்க ஆரம்பித்தார். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று உயிர் பயத்தில் அலறினார். உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றித் தூக்கினார். இயேசு அவரிடம்,, “உன் நம்பிக்கை சிறியதாக இருந்தது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று கேட்டார். பேதுரு வெட்கத்தால் முகம் வாடினார்.

பின்னர் பேதுருவை இயேசு படகில் ஏற்றிவிட்டு அவரும் ஏறியபின் காற்று அமைதியடைந்தது. அதன் பிறகு படகிலிருந்த சீடர்கள் இயேசுவை வணங்கி,, “உண்மையிலேயே நீர் கடவுளின் மகன்”. என்று அவரை அணைத்துக்கொண்டனர். அவர்கள் ஏரியைக் கடந்து, கெனசெரேத்து என்ற இடத்தை அடைந்தார்கள்.

அங்கிருந்த மக்கள் இயேசுவைக் கண்டதும் ஓடிவந்து குழுமிக்கொண்டனர். இன்னும் பலர் அப்பிரதேசத்தைச் சுற்றியிருந்த மற்றவர்களிடம் சென்று இயேசு வந்திருப்பதைக் கூறினார்கள். நோயாளிகள் அனைவரையும் இயேசுவிடம் அழைத்துவந்தனர். அவரது மேலாடையைத் தொடுவதற்கு அனுமதி பெற்று, இயேசுவின் மேலாடையைத் தொட்ட அனைவரும் குணமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x