கடலூர் | சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத் திருவிழா கோலாகலம் - பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெற்றது.
Updated on
2 min read

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.16) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து டிச.19 ம் தேதி சுவாமிகள் வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, டிச.20-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, டிச.21-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா, டிச.22-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானும் டிச.23-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், டிச,24-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் ஒரு லட்சம் ருத்ராட்சம் மஞ்சத்தில் வீதி உலாவும்,. டிச,25-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக் குதிரையில் வீதி உலாவும் நடைபெற்றது.

இன்று ( டிச.26 ) செவ்வாய்க் கிழமை முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர் திருவிழா நடைபெற்றது. இன்று அதிகாலை 6 மணி அளவில் மேலதாளம் வழங்கிட வேத மந்திரங்கள் ஓதிட ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்ரீ சண்டிகேசர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்தலில் எழுந்தருளினார்கள்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து சிவ சிவா, சிவ சிவா என்ற முழக்கத்துடன் இழுத்து சென்றனர். கீழவீதி, தெற்கு வீதி ,மேலவீதி, வடக்கு வீதி வழியாக இரவு நிலையை அடையும். நான்கு வீதிகளிலும் கட்டளைதாரர்கள் மண்டகப்படி செய்து செய்தனர். மேல வீதி மற்றும் வடக்கு வீதி முகப்பில் பருவத ராஜ குல மரபினர் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு பட்டு சாத்தி படையல் செய்தனர்.

இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை ( டிச.2 7 ) புதன் கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

டிச.28-ம் தேதி வியாழக் கிழமை பஞ்ச மூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

மேல வீதியில் உள்ள பெல்காம் அனந்தம்மாள் சத்திரத்தில் நிர்வாக அறங்காவலர் கனக சபை, ஆச்சாள்புரம் கிஷோர் குமார், வட்டத்தூர் பொறியாளர் செந்தில் குமார், சி முட்லூர் ராமச் சந்திரன், சிதம்பரம் கருணா மூர்த்தி, திருக்கோவிலூர் ஞானவேல் ஆகிய ஆகியோர் கொண்ட குழுவினர் பக்தர்கள், பொது மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். திருவிழாவை ஒட்டி எஸ்பி ராஜாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in