

திருத்தணி/காஞ்சி/திருப்போரூர்: மார்கழி கிருத்திகையை ஒட்டி திருத்தணி, திருப்போரூர், வல்லக்கோட்டை, குமரகோட்டம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நேற்றுஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயிலுக்கு மாதந்தோறும் கிருத்திகை அன்று திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்
இந்நிலையில், மார்கழி கிருத்திகை நாளான நேற்று அதிகாலை மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தங்கக் கிரீடம் மற்றும் வேல், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் உற்சவர் முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் சிறப்புஅபிஷேகம் நடந்தது. மார்கழி கிருத்திகையை முன்னிட்டும், நேற்று விடுமுறை நாள் என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் குவிந்து, நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரத்தினாங்கி சேவை: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். இத்திருக்கோயிலில் வழிபடுவோருக்கு புதியவீடு, திருமணம், நலமான வாழ்வுஆகியன கிடைப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்கு கிருத்திகையை ஒட்டிநேற்று மூலவர் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவர் கோடையாண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மலர்அலங்காரத்திலும் உற்சவர் கோடையாண்டவர் ரத்தினாங்கி சேவையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குமரகோட்டம் முருகன் கோயிலில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கந்தசுவாமி கோயில்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் உள்ள கந்தசுவாமி கோயிலில், நேற்று கிருத்திகை என்பதால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி சிறப்பு வழிபாடுகளுடன், கந்தசுவாமியை தரிசித்தனர். இதனால், கோயில் மாடவீதிகள் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு முருகப்பெருமான் கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து சுவாமியைத் தரிசித்தனர்.
மழையால் சேதமான மலைப்பாதை சீரமைப்பு: புயல், கனமழையால் திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் கடந்த 4-ம் தேதி இரவு திடீரென மண் அரிப்பு ஏற்பட்டு, 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்புச் சுவர் சரிந்து விழுந்தது.இதையடுத்து, மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்தது. தற்போது, பெரும் பகுதி சீரமைப்பு முடிவடைந்ததால், மலைப்பாதையில் 13 நாட்களுக்கு பிறகு, இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல கோயில்நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. இதையடுத்து, சிறிய ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.