ஆண்டாள் திருப்பாவை 8 | இறைவனை சரண் புகுவோம்...!

ஆண்டாள் திருப்பாவை 8 | இறைவனை சரண் புகுவோம்...!
Updated on
1 min read

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடையை
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந்து அருளோ ரெம்பாவாய்!

மனதில் எவ்வித கவலையும் இன்றி மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருக்கும் தோழியே! கீழ்வானம் வெளுத்து விட்டது. எருமைகள் அனைத்தும் பனிப் புல்லை மேயக் கிளம்பி விட்டன. பாவை நோன்புக்காக நீராட, நமது தோழியர் சென்றுவிட்டனர். அவர்களது உறவினர்களும் அவர்களுடன் செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் உன்னை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, அவர்களையும் போகவி்டாமல் காத்திருக்க வைத்து, உன்னை அழைக்க வந்து நிற்கிறோம். அதனால் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே எழுந்து வா! நமது கண்ணனின் புகழ்பாடி பாவை நோன்புக்கு வேண்டிய அனைத்தையும் தருமாறு வேண்டுவோம்.

குதிரை வடிவம் எடுத்து வந்த கேசி என்ற மாய அசுரனின் வாயைப் பிளந்து மாய்த்தவன் நம் கண்ணன். மதுராபுரியில் கொடிய நெஞ்சன் அனுப்பிய முஷ்டிகன், சாணுரன் போன்ற மல்லர்களை வீழ்த்தியவன் அவன். தேவர்களுக்கு எல்லாம் பெரிய தேவனை நாம் சென்றடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், அவன் மனமிரங்கி நமக்கு அருள் செய்வான். அதனால் கண்ணனுக்கு பிரியமான பதுமையாக இருக்கும் பெண்ணே! விரைவாக எழுந்து வா என்று மார்கழி நீராட தன் தோழியை அழைக்கிறாள் ஆண்டாள்.

இறைவனி்டம் முழுமையாக சரணாகதி அடைந்து விட்டால், அவன் நம் குறைகள் அனைத்தையும் பெரிதாகக் கருதாது, நம் மீது இரக்கம் கொண்டு நாம் வேண்டியது அனைத்தையும் தருவான் என்பது இந்த பாசுரம் மூலம் உணரப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in