Published : 13 Jan 2018 09:45 AM
Last Updated : 13 Jan 2018 09:45 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் என்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நங் காமங்கள் மாற்றேளோரெம்பாவாய்!

அதாவது, ‘சிற்றஞ்சிறு காலே’ என்றால் சிறியகாலைப் பொழுது... விடியற்காலை. சிற்றஞ்சிறூ காலைப் பொழுது, விடியற்காலைக்கும் முந்தைய நேரம். அதாவது, பிரம்மமுகூர்த்தம் எனப்படும் நேரம். இந்த பிரம்மமுகூர்த்தத்தில், எழுந்து ஒருவன் தனது நிலைமையை சிந்திக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இயற்கையான (ஆக்ஸிஜன்) வாயு அதிகம் மாசுபடாமல், இருக்கும் நேரம் இது. அந்த நேரமே, உடலுக்கும் மனதுக்கும் ஆழ்மனதுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் . எனவேதான், மாணவர்களை விடியற்காலைப் பொழுதில், எழுந்து படித்தால், மனதில் நன்றாகப் பதியும் என பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள்.

அவ்வாறு சிறப்புமிக்க நேரத்தில், கண்ணபரமாத்மாவாகிய உன்னை வந்து நாங்கள் வழிபட்டு, உன் பொற்றாமரைப் பாதங்களைப் பற்றும் காரணாம் என்ன என்று கேட்டால், வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் மட்டுமே அறிந்து கொள்ளக் கூடிய நீ, எங்களுக்கு மிகவும் எளியவனாக மாடு மேய்த்து, அதன் வயிறு நிரம்பியதைப் பார்த்து, அதன் பிறகு உணவு உண்ணும் எங்களின் குலத்தில் வந்து, பிறந்திருக்கிறாய்.

உன் அவதார ரகசியம் எங்களுக்குத் தெரியும். இந்த வாய்ப்பை நழுவவிடமாட்டோம். நீ எங்களை உனது தொண்டுக்கு ஆட்படுத்தும் படியாக, உன்னை விட்டுப் பிரியாமல், எப்போதும் உன்னருகே இருந்து உனக்குத் தொண்டு புரிந்து வருவதற்கு, எங்களுக்கு உத்தரவிடவேண்டும்.

அவனருளால் அவன் தாள் பணிந்து என்பது போல், உன் கருணை இருந்தால் மட்டுமன்றோ நாங்கள் உனக்குத் தொண்டு செய்து, பிழைக்க முடியும். அதை விடுத்து எங்களுக்கு, பறை, சங்கு, விளக்கு, கொடி, விதானம் ஆகியவற்றை நாங்கள் கேட்டுப் பெற்றது அல்ல உன்னைக் காண வந்த நோக்கம், போதும்!

பகவானே! நீ ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் போதும், உன்னைவிட்டுப் பிரியாது உனக்குத் தொண்டு செய்து, உன்னடி போற்றுபவர்களுக்கு உன்னோடு உறவு உள்ளவர்களாக, நாங்கள் வந்து தொண்டு புரியவேண்டும்.

.உனக்கே நாமாட்செய்வோம். உன் ஒருவனுக்கே நாங்கள் தொண்டர்களாக இருந்து தொண்டூழியம் (தொண்டு ஊழியம்) செய்ய வேண்டும். இது தவிர, மற்ற பணிகளில் எமது சிந்தனையும் செயலும் ஈடுபடாது. பிற செயல்களில் வரக்கூடிய ஆசைகளை நீயே மாற்றி அருளவேண்டும்.

உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன். இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தல் நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் என பெரியாழ்வார் அழகரிடம் விண்ணப்பித்திருப்பதைப் போல், ஆண்டாளும் திருமால் ஒருவனே சரண்புகத் தக்கவன். அவன் திருவடிகளில் தொண்டு புரிவதே பிறவிப்பயன் என்பதை அழகாக விவரிக்கிறாள்.

ஆண்டாளின் பாடல்களைப் பாடுவோம். ஆண்டவன் திருமாலைத் தொழுவோம். பிறக்கும் தைத்திருநாள் தொடங்கி அடுத்த மார்கழி வரை, அடுத்தடுத்த காலங்கள் வரை, நற்சிந்தனைகளுடன் நற்செயல்கள் செய்து, எல்லா சத்விஷயங்களும் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

எல்லோருக்கும் மகாவிஷ்ணுவின் பேரருள் கிடைக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x