ராமேசுவரம் கோயிலில் பழமை மாறாமல் மூன்றாம் பிரகார தூண்களை சீரமைக்கும் பணி தீவிரம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மூன்றாம் பிரகார தூண்களை பழமை மாறாமல் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுர சேதுபதி மன்னர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர். ராமநாத சுவாமி கோயிலின் தர்ம கர்த்தாக்களாக இருந்து தங்களின் ஆட்சிக்குட்பட்ட பல கிராமங்களின் வருமானத்தை கோயிலுக்கு தர ஏற்பாடு செய்தனர்.

முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1740-ல் ராமநாத சுவாமி கோயிலின் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணியைத் தொடங்கினார். முத்துராமலிங்க சேதுபதி மூன்றாம் பிரகாரக் கட்டிட வேலையை கி.பி. 1769-ல் நிறைவடைய செய்தார். இந்த மூன்றாம் பிரகாரத்தின் நீளம் 690 அடி, உயரம் 22.5 அடி, 1212 தூண்களை கொண்டது. மேலும் பிரகாரத்தில் பல்வேறு சிற்பங்கள், ஓவியங்கள் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

கடலின் உப்புக்காற்று மற்றும் தீர்த்தமாடுபவர்களால் ஏற்படும் ஈரம் ஆகியவற்றால் மூன்றாம் பிரகார பகுதி அவ்வப்போது சேதமடைந்தது. சென்னை ஐ.ஐ.டி-யின் தொழில் நுட்பப் பொறியாளர்கள் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தூண்களை ஆய்வு செய்து, அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறைக்கு வழங்கினர்.

இதைத் தொடர்ந்து ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் மூன்றாம் பிரகார துாண்களை பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்களை சீரமைப்பதற்காக சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் கலந்த கலவை பயன்படுத்தப்படுகிறது. இப்பணிகள் நிறைவடைய 3 மாதங்கள் ஆகும், என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in