நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை
நாமக்கல்: மார்கழி பிறப்பு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.
நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை பக்தர்களின் சார்பில் பொது அபிஷேகம் மற்றும் அலங்காரம், பூஜை நடைபெறும். மார்கழி பிறப்பு மற்றும் முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 9 மணிக்கு 1,008 வடைகளால் ஆன மாலை சுவாமிக்குச் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட நறு மணப் பொருட்கள் மற்றும் கனகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்குச் சிறப்பு அலங்காரமும், பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
