

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
மார்கழி மாதம் இனிதே பிறந்துவிட்டது. கோகுலம் என்றும் ஆய்ப்பாடி என்றும் அழைக்கப்படும் புகழ் நிறைந்த ஆர் பாடியில் வாழும் செல்வச் செழிப்பு மிக்க இளம் பெண்களே! தாமதம் செய்யாமல் விரைந்து வர வேண்டும். தீய எண்ணம் கொண்டவர்களைக் கொல்வதற்காக கூர்மையான வேலை. கையில் ஏந்தியபடி நந்தகோபன் உள்ளார். பல வண்ண வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மணமிக்க மாலையை அணிந்துள்ளபடி யசோதை பிராட்டி இருக்கிறார்.
இவர்களின் மைந்தனான நாராயணன், நீலமேனியுடன், செக்கச் சிவந்த கண்களை உடையவராக காட்சி அருள்கிறார். சூரிய-சந்திரர்களைப் போன்று பிரகாசிக்கும் திருமுகத்தை உடையவராக இருக்கும் பரந்தாமன் நமக்கு அருள்பாலிக்க காத்துக் கொண்டிருக்கிறார். நம் அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக அவர் நிச்சயமாக இருப்பார். நாம் விரும்புவதைத் தரும் வள்ளலாக இருக்கும் அவர் புகழைப் பாடி அவரது அருள் பெறுவோம். எனது அருமைத் தோழிகளே! என்று பாவை நோன்பின் சிறப்புகள், நெறிமுறைகள், நோக்கங்கள், பயன்கள் அனைத்தையும் விளக்கி, தனது தோழியரை நீராட அழைக்கிறாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
கிராமத்து சூழல், இறைவனை பக்தியுடன் வழிபடுவது. ஒவ்வொருவருடைய அன்றாக பழக்க வழக்கங்கள், இயற்கை வர்ணனை, பறவைகளின் ஒலி ஆகியவற்றை தனது பாசுரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறாள் கோதை நாச்சியார்.
கே.சுந்தரராமன்