

தென்காசி: கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் மார்கழித் திருவிழா இன்று (டிச. 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில், சுவாமி ஐயப்பனுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வாள், நகைகள், கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.
சுவாமி ஐயப்பனின் திருஆபரணப் பெட்டி கேரள மாநிலம் புனலூர் கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த வாகனம் புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
செங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள விநாயகர் கோயில் வாயிலில் பக்தர்கள் வரவேற்பு அளித்து, தரிசனம் செய்தனர். அங்கிருந்து தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்புதிருஆபரணப்பெட்டி வாகனம்நிறுத்தப்பட்டது. அங்கு ஆபரணப் பெட்டிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அச்சன் கோவிலுக்கு வாகனம் புறப்பட்டுச் சென்றது.