

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நாகை மீரா பள்ளி வாசலில், முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில், பிற்பகல் 12 மணியளவில் பாத்தியா ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகியவற்றில் 5 கொடிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணி சட்டி, பிறை, படகு போன்ற வடிவிலான அலங்கார பல்லக்குகள் கொடி ஊர்வலத்தில் அணிவகுத்துச் சென்றன. நாகை புதுப்பள்ளி தெரு, நூல்கடை தெரு, வெங்காய கடை தெரு, பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, தெற்கு, வடக்கு வீதி, புதுத்தெரு, சர் அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களின் வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர், அண்ணா சிலை, பொது அலுவலக சாலை வழியாக நாகூர் எல்லையை ரதங்கள் சென்றடைந்தன. பின்னர், நாகூர் எல்லையில் இருந்து நாகூர் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக வந்த கொடி ஊர்வலம் தர்காவின் அலங்கார வாசலை நேற்று மாலை சென்றடைந்தது.
பின்னர், தர்காவில் துவா ஓதப்பட்டு, மினராக்களின் உச்சிகளுக்கு கந்தூரி விழா கொடிகள் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிபு பாத்தியா ஓதியதும், இரவு மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டன. அப்போது, வாணவேடிக்கை நடைபெற்றது.