

திருச்சி: பூலோக வைகுண்டம் என்றுஅழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி நேற்றிரவு சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகம், அபிநயம், வியாக்யானம், திருப்பணியாரம் அமுதுசெய்தல், கோஷ்டி, திருவாராதனம், திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பலங்காரம், தீர்த்தகோஷ்டி ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெற்றன.
இன்று (டிச. 13) முதல் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. இதையொட்டி, கோயில் உற்சவரான நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இன்று காலைபுறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தை சேருவார். அங்கு அரையர் சேவை, அலங்காரம், திருப்பாவாடை கோஷ்டி, உபயதாரர் மரியாதை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர், இரவு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல் பத்து நாட்களில் வரும்22-ம் தேதி வரை தினமும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இந்நாட்களில் மூலவர் முத்தங்கி சேவையை காலை 7.15 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும், மாலை 6.45 முதல் இரவு 8.30 மணி வரையிலும் சேவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்குப் பிறகு ஆரியபடாள் வாயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் வரும் 22-ம் தேதியும், சொர்க்கவாசல் திறப்பு 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளன.தொடர்ந்து இராப் பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ஜன. 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில்இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.