

சிவகங்கை: சிவகங்கை அருகே ஏழைகாத்தாள் அம்மன் கோயில் மது எடுப்பு விழாவில், பக்தர்கள் உடலில் சேறு பூசி விநோத முறையில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிவகங்கை அருகே தமறாக்கியில் அமைந்துள்ள ஏழைகாத்தாள் அம்மன் கோயில், தமறாக்கி மற்றும் குமாரப்பட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மது எடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு கடந்த நவ.27-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோயிலில் அம்மன் போன்று 7 சிறுமிகள் அலங்கரிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் இவ்விழாவின் ஒரு பகுதியாக அய்யனார் கோயிலுக்கு 30-க்கும் மேற்பட்ட புரவிகளை எடுத்துச் சென்றனர். நேற்று ஏழைகாத்தாள் அம்மனுக்கு மது எடுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆட்டு கிடாக்களை பலி கொடுத்தனர். மேலும், ஆண்கள் உடலில் சேறுபூசி நேர்த்திக்கடன் செலுத் தினர். விழாவில், தமறாக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிபட்டி, கள்ளங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இத்திருவிழா டிச.19-ம் தேதியுடன் முடிகிறது.