புனரமைப்புக்கு பிறகு 2 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 13 கோடி பக்தர்கள் வருகை

புனரமைப்புக்கு பிறகு 2 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 13 கோடி பக்தர்கள் வருகை
Updated on
1 min read

வாரணாசி: உத்தரபிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சாதனை அளவாக கடந்த 2 ஆண்டுகளில் 13 கோடி பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். நாடுமுழுவதிலும் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசால் இக்கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு, வசதிகள் அதிகரிக்கப்பட்ட பிறகு பக்தர்கள் வருகை மளமளவென உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இக்கோயிலுக்கு 16,000 வெளிநாட்டு பக்தர்கள் உட்பட 13 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர்.

இதுகுறித்து கோயிலின் தலைமை செயல் அலுவலர் சுனில் வர்மா வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ம்தேதி திறந்துவைத்த பிறகு இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2021, டிசம்பர் 13-ம்தேதியில் இருந்து 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி வரை 12 கோடியே 92 லட்சத்து 24,000 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். 2022-ம் ஆண்டை காட்டிலும் 2023-ம் ஆண்டுக்கான முன்பதிவு கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in