

தெய்வங்களின் திருகல்யாணங்கள் மக்களிடையே மிகவும் பிரசித்தமானவை. சமண மதத்தில் பகவானின் கருவறை தொட்டு கடவுளாகும் வரை நடைபெற்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் பஞ்ச கல்யாணம் எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது கர்ப கல்யாணம், ஜென்ம கல்யாணம், தீட்சா கல்யாணம், கேவலஞான கல்யாணம், மோட்ச கல்யாணம் என ஐந்து வகைப்படும்.
கர்ப கல்யாணம்
இது பகவானின் தாயார் 16 சுப கனவுகள் கண்ட பின் தாயாரின் கர்ப்பத்தில் பகவான் உதிக்கிறார். இதை அறிந்த தேவலோக சௌமேந்திரன் தேவகன்னியர்களை அனுப்பிப் பணிவிடைகள் செய்து அத்தாயைக் கவனமாக பார்த்துக்கொள்ள அணையிடுகிறான்.
ஜென்ம கல்யாணம்
பகவான் கர்ப்பத்திலிருந்து அவதாரம் செய்வதே ஜென்ம கல்யாணம் எனப்படும். அந்த அவதாரத்தின்போது சௌதர்மேந்திரன் அரியணை ஆடுகிறது. தேவ துந்துபி தானாகவே ஒலிக்கிறது. பேரிகை முழங்குகிறது. இதனால் பகவான் பிறந்ததை அறிகிறான். உடனே பட்டத்து யானை ஐராவதம் மீதேறி பரிவாரங்களுடன் பூலோகத்திற்குக் கோலாகலமாக வருகிறான். ஜின குமாரனையும் ஜின மாதாவையும் கண்டு வணங்கி மகிழ்கிறான். பின் தாய்க்கு மாய நித்திரை ஏற்படுத்தி, அருகிலேயே ஒரு மாயக் குழந்தையையும் கிடத்தி, குழந்தை பகவானை எடுத்துக்கொண்டு தேவேந்திரன் தேவலோகத்தை அடைகிறான். அங்கு பகவானுக்கு பாற்கடல் ஜென்மாபிஷேகம் சிறப்பாக நீரால் செய்கிறான்.பின் குழந்தையை எடுத்துவந்து தாயிடம் சேர்த்து மாயநித்திரையையும் நீக்கி நடந்தவற்றைக் கூறுகிறான். சௌதர்மேந்திரனால் தேவலோகத்தில் செய்யப்பட்ட ஜென்மாபிஷேகம் பற்றி அறிந்த பெற்றோர் மகிழ்கின்றனர். குழந்தை பகவான் வளர்ந்து பலகலைகளும் கற்ற பின் அரசாட்சியை ஏற்றுக் கொள்வார்.
தீட்சா கல்யாணம்
நல்லாட்சி நடத்திவரும் வேளையில் பகவான் துறவறத்தின் மீது நாட்டம் கொண்டு, சுக போகத்தைத் துறந்து துறவை ஏற்கிறார். இது தீட்சா கல்யாணம்.
கேவல ஞான கல்யாணம்
துறவு மேற்கொண்டவர் காடு, மலை, குகைகளில் கடுந்தவம் செய்து முழுதுணர் ஞானம் பெறுகிறார். பின்பு பல இடங்கள் சென்று மக்களுக்கு அறவுரை ஆற்றுவார். இதுவே கேவல ஞான கல்யாணம் எனப்படும்.
மோட்ச கல்யாணம்
எல்லா தரும உபதேசங்களையும் முடித்துவிட்டு காதி கருமங்களையும்,அழித்து மோட்ச மார்க்கமடைய தவ நிலையிலிருந்து, முக்தி அடைவார். இதுதான் மோட்ச கல்யாணம்.
புதிய ஆலயங்கள் கட்டினாலோ, புனரமைத்தாலோ பஞ்ச கல்யாண பாவனைகள் நடத்துவர். இதுவே பிரதிஷ்டை அல்லது குடமுழுக்கு எனப்படும்.