Published : 18 Jan 2018 10:43 AM
Last Updated : 18 Jan 2018 10:43 AM

தெய்வத்தின் குரல்: தான எண்ணத்தைத் தானம் செய்க

வே

தம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது யாகம்தான். யாகமும் தியாகமும் ஒன்றுதான். இங்கிலீஷில்கூட யாகம், தியாகம் இரண்டையும் ‘ஸாக்ரிஃபைஸ்’ என்றுதானே சொல்கிறார்கள்? ஆனதால், வைதிகம் என்பது தன்னலமே கருதுவது என்ற அபிப்ராயம் அடியோடு பிசகு.

தன்னலத்தை முழுக்கத் தியாகம் பண்ணுவதுதான் ஸநாதன தர்மத்தின் லட்சியம். இங்கே ‘தர்மம்’ என்பதே மதம். வேத தர்மம், ஹிந்து தர்மம் என்றாலே வேத மதம், ஹிந்து மதம் என்றுதான் அர்த்தம். இதே ‘தர்மம்’ பரோபகாரங்களில் ஒன்றான ஈகையாக நினைக்கப்படுவது.

யாகத்திலே நெருப்பில் வஸ்துக்களை, உடைமைகளைப் போட்டு தியாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்கு ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, சுபிட்க்ஷம், நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அநுக்ரஹம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடைமையை வேள்வித் தீயில் தியாகம் பண்ணி இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்.

இதுவே பரம ஆனந்தம்

சொத்து, சுதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு அநுபவிப்பதில் பெறுகிற சுகம் ரொம்பவும் தற்காலிகமானது. இந்தத் தற்காலிகச் சுகம் நித்ய செளக்கியமான ஆத்மா அபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது. ஆனால், இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது.

சாஸ்வத செளக்கியத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான ‘ஈசாவாஸ்ய’த்தில் முதல் மந்திரத்திலேயே, ‘தியாகம் பண்ணி அநுபவி’ என்று சொல்லியிருக்கிறது. காந்திகூட இதில்தான் தம்முடைய ‘ஃபிலாஸஃபி’ முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த உபநிஷத்தைத் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு சிலாகித்து வந்தார்.

கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவும் செய்து முடிக்கும்போது, “நான் தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே. அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது” என்ற பரமத் தியாக புத்தியில் “ந மம” – “எனதில்லை; எனக்கில்லை” என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது.

மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, “நான் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாகத் தியாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.

மஹாபலி எதைப் பலி கொடுக்கவில்லை?

மஹாபலி நிறையக் கொடுத்தான். வாரி வாரிக் கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அகங்காரத்தை அவன் பகவானுக்குப் பலி கொடுக்கவில்லை. இதனால்தான் பகவானே அவனிடம் இந்த அகங்காரத்தை யாசகமாகப் பெற்று, அகங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

சமூக சேவை என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக்கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய சர்வீசால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம். ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.

“தன் கையே தனக்கு உதவி” தன் கை பிறருக்கும் உதவியாகப் பரோபகாரப் பணிகளைச் செய்யத்தான் வேண்டும். ஆனால், தன் கை தன் காரியத்துக்கு உதவியாக இல்லாமல், தன் காரியத்துக்கு அகத்தின் மற்ற மநுஷ்யர்களின் கையை எதிர்பார்த்துக்கொண்டு அவர்கள் கையில் நம் காரியப் பொறுப்பைப் போட்டுவிட்டு, நாம் ஊருக்கு உபகாரம் பண்ணுவது என்பது தப்பு.

ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக் கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார் நம்மைக் கொண்டாட மாட்டார்கள்தான். வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக் காரியத்தைப் பண்ணிக் கொள்ளாமல், ஊருக்கு ஒருத்தன் பண்ணுகிறான். அதற்கு இடைஞ்சலாகச் சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே இல்லை, பேர் வாங்குவதற்காகத்தான் சோஷியல் சர்வீஸ் என்று பண்ணுகிறான் என்றே அர்த்தம்.

தொண்டு உள்ளத்துக்கு லட்சணம் அன்பும் அடக்கமும்தான். “தொண்டர் தம் பெருமை” என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாமேயொழிய, தொண்டு செய்கிறவனுக்குத் ‘தான் பெரியவன்’ என்ற எண்ணம் லவலேசங்கூட இருக்கக் கூடாது. தொண்டு மனத்தின் தன்மை இதுவே.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x