Published : 11 Jan 2018 09:25 AM
Last Updated : 11 Jan 2018 09:25 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை -27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னை

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது, ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ தம்முடன் கூடாதவர்களை, தம்மை நாடி வராதவர்களையும் தனது அன்பினால், கருணையால், அழகால் மயக்கி தம்மைச் சரணடையச் செய்பவன் கோவிந்தன் என்று அர்த்தம் உண்டு.

தனது பகைவர்களை, தனது அடியார்களின் பகைவர்களை எதிர்கொண்டு போரிலே வென்றூ அழிக்கும் கோவிந்தன் என்றொரு அர்த்தமும் இருக்கிறது.

அப்பேர்ப்பட்ட கோவிந்தனே! நாங்கள் உன்னைப் பாடி உனது அருளால், நாங்கள பெறும் பயன் யாதெனில் நாடு புகழும் பரிசாகும். நாங்கள் உனது அருளையும் அன்பையும் பெற்றதை நாடே புகழ்ந்து வியக்கும்.. அதுவே எங்களுக்குப் பெரிய பரிசு. நாடே போற்றும் பரிசு. ஆகவே, உன்னைப் பார்க்கும் போது, இன்று புத்தாடைகள் அணிந்து கொள்வோம்.

முன்பு நோன்பு நோற்கத் தொடங்கும் போது, அதாவது இரண்டாவது பாசுரத்திலே நெய்யுண்ணோம், பாலுண்ணோம் தமது அழகைக் காட்டிக் கொள்ளாமல் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளமாட்டோம், கூந்தலுக்கு நறுமலர் சூடிக் கொள்ளமாட்டோம். அவையெல்லாம் நோன்புக்குத் தடையாக உள்ளவை என அவற்றை விலக்கி வைத்தாள் ஆண்டாள்.

ஆனால் கிருஷ்ணானுபவம் கிடைக்கப் பெற்ற பின், கண்ணன் தன் கைத்தலம் பற்றுவான் என உறுதியாகிவிட்டபடியால், கைகளுக்கு வளையல் அணிவோம்,செவிகளில் தோடுகள் அணிவோம், தோள்களில் அணியக் கூடிய பண் என்னும் (புஜகீர்த்தி) அணிகலன்களை அணிவோம். கால்களுக்கு கொலுசு போன் ற பாடகம் எனும் அணிகலன் அணிந்துகொள்வோம்.

கைகளுக்கு சூடகம் அணிவோம். காதுகளில் தோடுகளுக்கு மேல்புறத்தில் சிறுதோடு அணிவோம். (கிட்டத்தட்ட ‘சைடு’ தோடு, மாட்டல் போல் ஆபரணம் இது).

கழுத்தில் பல வித ஆரங்கள், மணிமாலைகள் மற்றும் பல ஆபரணங்களைச் சூடி புத்தாடை அணிந்து, பால் சோறு சமைத்து, அதில் சோறு நிரம்பும்படி நெய் பெய்து, அனைவரையும் அழைத்து வந்து, அதைக் கண்ணனுக்கு அமுது செய்து, கண்ணனுடன் கூட அனைவருமாகச் சேர்ந்து கூடியிருந்து கண்ணனின் நாமத்தைப் பாடி கையில் எடுத்தால் நெய், முழங்கை வரை வழியும்படியாக உள்ள அந்த பால் சோற்றை, அனைவரும் அவனுடைய பிரசாதமாகச் சாப்பிட்டு மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள்.

ஆகவே, 27ம் நாளான இன்றைய தினம், அனைவரும் வீடுகளில் ஆண்டாளின் பாசுரங்களைப் பாடுங்கள். பால்சோறு மூட நெய் பெய்து... பால்சர்க்கரைப் பொங்கல் செய்து கண்ணபிரானுக்கு நைவேத்தியம் செய்யுங்கள். அதை அனைவருக்கும் பகிர்ந்து வழங்குங்கள்.

அப்படிச் செய்தால், கண்ணபிரான் நம்முடன் கலந்திருந்து அவனும் சாப்பிட்டு, அவனின் பேரருளை நம் மீது பொழிவான். இம்மையிலும் மறுமையிலும் குறையொன்றுமில்லாத கோவிந்தனின் அருளால், குறைவின்றி வாழலாம்!

தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் இன வேறுபாடுகளைக் களைந்தும் பகிர்ந்து சாப்பிடும் குணத்தை வளர்க்கவேண்டியும் என பல நல்ல விஷயங்களை நமக்குத் தந்தருளிய ஆண்டாளைப் போற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x