

குமுளி: சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதை பொருட்படுத்தாமல், மழை யில் நனைந்தவாறே பக்தர்கள் ஆர்வமுடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி மாலை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 17-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் வழிபாடுகள் நடை பெற்று வருகின்றன. பக்தர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும், முன்பதிவு மூலமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனு மதிக்கப் படுகின்றனர்.
உடனடி முன்பதிவுக்காக நிலக்கல்லில் சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பகலில் பம்பை மற்றும் சபரிமலை பகுதிகளில் சாரல் பெய்தது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: இன்று ( புதன்கிழமை ) சிறப்பு வழிபாடாக நண்பகல் 12 மணிக்கு கலச பூஜையும், மாலை 6.45 மணிக்கு மலர் அபிஷேகமும் நடைபெற உள்ளன. வழக்கம் போல் பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 4 மணிக்குத் திறக்கப்படும். மொத்தம் 65 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்று முதல் ( நவ.21 ) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறினர்.