Published : 17 Nov 2023 04:08 AM
Last Updated : 17 Nov 2023 04:08 AM

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நேற்று கடைமுழுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, புனித நீராடினர்.

பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்ளிட்ட ஜீவ நதிகள், மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் கலந்து, சிவனை வழிபட்டு, தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம் நிலவுகிறது. காசிக்கு நிகராக கருதப்படும் இந்த தலத்தில், ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் துலா உற்சவம் நடைபெறும்.

அதன்படி, நடப்பாண்டு அக்.18-ம் தேதி காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக் கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஐப்பசி கடைசி நாளான நேற்று கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி, மாயூரநாதர், அய்யாரப்பர், தெப்பக்குளம் மற்றும் மலைக்கோயில் காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று, துலாக்கட்ட காவிரி தென்கரையிலும், வதான்யேஸ்வரர், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று காவிரி வடகரையிலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை வேலப்ப தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

இதில் எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏ எஸ்.ராஜகுமார், நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.துலா உற்சவத்தை முன்னிட்டு,காவிரியில் பக்தர்கள் புனித நீராட ஏதுவாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட எஸ்.பி. மீனா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x