சபரிமலை சீசன் இன்று தொடக்கம்: தேனியில் ஐயப்ப பக்தர்களுக்கு வரவேற்பு

கம்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-ல் வைக்கப்பட்டு உள்ள பேனர்.
கம்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-ல் வைக்கப்பட்டு உள்ள பேனர்.
Updated on
1 min read

குமுளி: சபரிமலை சீசன் இன்று தொடங்கும் நிலையில், தேனி மாவட்டத்தில் பக்தர்களுக்கு குளியலறை, வாகன நிறுத்துமிடம், குடிநீர், பூஜை செய்வதற்கான இடம் உள்ளிட்ட வசதிகளை பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செய்துள்ளன. மேலும், பக்தர்களை வரவேற்று வழிநெடுகிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு தேனி, கோவை, செங்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்டபல்வேறு வழித்தடங்கள் மூலம் பக்தர்கள் செல்கின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாகத்தான் அதிக அளவில் சென்றுவருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் தேனி மாவட்டத்தில் புறவழிச் சாலை நடைமுறைக்கு வந்ததால், பயணமும் எளிதாக உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலையில் இன்று (நவ.16) மாலை நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து, நாளை அதிகாலை முதல் டிச. 27-ம் தேதி வரை 41 நாட்கள் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். டிச. 31-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரைமகரவிளக்கு பூஜை நடைபெறும். இதற்காக இன்று முதல் ஜனவரி 15-ம் தேதி வரையிலான இரண்டு மாதங்களுக்கு லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் செல்வார்கள். ஐயப்ப பக்தர்களின் வருகையையொட்டி இப்பகுதியில் அன்னதானம், வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் வருகையால் வர்த்தகம் பல மடங்குஅதிகரிக்கும்.

அடிப்படை வசதிகள்: இந்நிலையில், ஐயப்ப பக்தர்களை வரவேற்று ஹோட்டல், பெட்ரோல் பங்க், தங்கும் விடுதி,ஆன்மிக அமைப்புகள் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த உரிய இடவசதி செய்து தருவதுடன், ஓய்வெடுக்க, குளிக்க, பூஜை செய்ய, சமையல் செய்வதற்கான இடங்களையும் வர்த்தக நிறுவனங்கள் ஒதுக்கிஉள்ளன.

இதுகுறித்து வர்த்தகர்கள் கூறும்போது, "புறவழிச் சாலையில் வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. தமிழகம்-கேரளாவை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்களை சார்ந்தே இப்பகுதி வியாபாரம் உள்ளது.

தற்போது சபரிமலை சீசன்தொடங்கி உள்ளதால், ஐயப்ப பக்தர்களை வரவேற்கும் வகையில் அறிவிப்புப் பலகைகள்வைத்துள்ளதுடன், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in