தாளவாடி பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி திருவிழா - தமிழகம், கர்நாடக மாநில பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற சாணியடித் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற சாணியடித் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யுள்ள கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாணியடித் திருவிழாவில், தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தீபாவளி முடிந்த 3-வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவில், பக்தர்கள் ஒருவர் மேல் ஒருவர் மாட்டுச் சாணத்தை பூசிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கென சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடைகளின் சாணம், கோயிலின் பின் பகுதியில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டு, குவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை கோயிலுக்கு அருகில் உள்ள குளத்துக்கு பீரேஸ்வரரை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள் நீராடச் செய்தனர். அதன் பின்னர் கழுதை மேல் வைத்து சுவாமியை கோயிலுக்கு எடுத்துச் சென்று, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, குவித்து வைக்கப்பட்டு இருந்த சாணத்தை உருண்டையாக உருட்டி, பக்தர்கள் ஒருவர் மீது பூசியும், வீசியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சாணியடி நிகழ்வுக்குப் பிறகு, அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு பக்தர்கள் பீரேஸ்வரரை வணங்கிச் சென்றனர். இந்த வழிபாட்டால் ஊர் மக்கள், கால் நடைகள் நலம் பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்கும். சாணத்தை உடலில் பூசுவதன் மூலம் உடலில் உள்ள நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த திருவிழாவில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in