Last Updated : 31 Jan, 2018 03:29 PM

 

Published : 31 Jan 2018 03:29 PM
Last Updated : 31 Jan 2018 03:29 PM

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் தை பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை பூச ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு வருடா வருடம் தைப்பூசத் திரு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 147வது தை பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.சத்திய ஞானசபையில் உள்ள கொடிக் கம்பத்தில் சன்மார்க்க சங்க கொடியேற்றப்பட்டது.

இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூரிலும் பிறகு கருங்குழி ஆகிய ஊர்களிலும் கொடியேற்றப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு சத்திய ஞானசபையில் முதல் ஜோதி தரிசனம் நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் சம்பத், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். இதனை த்தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடந்தது.

நாளை (பிப்.1ம் தேதி) காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. இந்த தைப்பூசத் திருவிழாவில் வெளிநாடு, வெளிமாநிலம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

வடலூர் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது. அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபை வளாகம் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மேலும் பக்தர்களுக்கு அன்னதானங்கள் ஒரே இடத்தில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7 மணிக்கு தருமசாலை மேடையில் ஊரன் அடிகள் தலைமையில் சன்மார்க்க கருத்தரங்கு நடந்தது. இரவு 12 மணிக்கு வள்ளலார் நாடகம் நடந்தது.

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக சத்திய ஞானசபை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டிருந்தது.

கடலூர் எஸ்பி. விஜயகுமார் தலைமையில் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தைப் பூச திருவிழாவையொட்டி வடலூர் நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது. வடலூர் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

நாளை மறுநாள் (2ம் தேதி) மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத் திரு அறை தரிசனம் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. அன்று காலை 10 மணி முதல் இரவு 9 மணியளவில் மகாமந்திரம் ஓதுதல், சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவுகள், திருஅருட்பா இன்னிசை, வள்ளலார் வாழ்வியல் நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, சத்திய ஞானசபை நிர்வாக அதிகாரி கருணாகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x