

அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்டு ரோடு பகுதியில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 மலைக்கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபடுவார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அரவான் கடபலி நடந்தது. அப்போது திருநங்கைகள் தாலியை அறுத்து கண்ணீர் விட்டு அழுதனர்.
இதையடுத்து அரவான் கடபலி நிறைவு பெற்றது. பின்னர் கூத்தாண்டவர் சாமந்தி பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு சாமந்தி பூ சூறை விடப்பட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண் பக்தர்கள் ரத்த சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. வரம் வேண்டி காத்திருக்கும் பெண் பக்தர்கள் ரத்த சோற்றை மடிப்பிச்சையாக பெற்று அங்கேயே உண்டனர். இதில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.