Last Updated : 11 Jan, 2018 11:37 AM

 

Published : 11 Jan 2018 11:37 AM
Last Updated : 11 Jan 2018 11:37 AM

பொங்கல் சிறப்புக் கட்டுரை: கதிரவனைச் சுற்றும் உலகம்

கும்பகோணம் நகரின் மையத்தில் உள்ள நாகேஸ்வரன் கோயிலில் கருங்கல்லால் ஆன பிரம்மாண்டமான தேர் ஒன்று இருக்கிறது. கருங்கல்லால் செய்யப்பட்ட இரண்டு பாயும் குதிரைகள் அத்தேரை இழுத்துச் செல்வதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேருக்கு கருங்கல்லாலான இரண்டு சக்கரங்கள் இருக்கின்றன. சக்கரங்கள் ஒவ்வொன்றும் சுமார் ஆறடி உயரம் கொண்டவை. அந்தச் சக்கரத்தின் ஆரக்கால்களாக 24 கதிரவ மூர்த்திகள் (சூரிய பகவான்) தேரின் அச்சைத் தாங்கிப் பிடித்தபடி நிற்கிறார்கள். ஒரு சக்கரத்துக்கு 24 என்றால் மொத்தம் 48 கதிரவ மூர்த்திகள். தேருக்கு உள்ளே தன்னைச் சுற்றிப் பிரபஞ்சப் பேரியக்கத்தைச் சுழலவிட்டபடி ஆடலரசர் (நடராஜர்) ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு கதிரவனைச் சுற்றிலும் ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பூமி இடம்பெற்றிருக்கும் சூரியக் குடும்பம் என்பது சூரியனை மையமாகக்கொண்டே இயங்கிக்கொண்டிருக்கிறது. அதைப் போலவே ஒவ்வொரு கதிரவனும் தனித்தனியான கோள் கூட்டங்களின் குடும்பத் தலைவராக இருக்கிறான். இப்பிரபஞ்சத்தில் உள்ள கணக்கிலடங்காத கதிரவ மூர்த்திகளைச் சுற்றிலும் இயங்கிக்கொண்டிருக்கும் அத்தனை உலகங்களுக்குமான தலைவன், ஈசன் தேருக்கு உள்ளே திருநடம் புரிந்தபடி இருக்கிறான் என்கிற கருத்தையே இந்தக் கல்தேர் பறைசாற்றுகிறது.

உன்னத இடம்

கதிரவன் என்பவன் உலகத்தின் அடிப்படை இயக்க ஆற்றலாக இருக்கிறான். ஒரு பிண்டம் (உடம்பு) இயங்க வேண்டுமானால் வெப்ப ஆற்றல் தேவை. ஓர் அண்டம் (உலகம்) இயங்க வேண்டுமானால் கதிரவ ஆற்றல் தேவை. கதிரவன் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. கல் தேரின் வேறு எந்தப் பாகத்திலும் கதிரவர்களை வைக்காமல், சக்கரத்தில் ஆரக்கால்களாகக் கதிரவ மூர்த்திகளை வைத்ததன் நோக்கமே, உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் என்பதுதான். எனவேதான் நமது பண்பாட்டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக உன்னதமான இடத்தை வைத்திருக்கிறோம்.

பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன. நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குகிறது, அதைச் சார்ந்த மற்ற தொழில்களும் சிறந்து விளங்குகின்றன, நமது குடும்பங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஆநிரைச் செல்வங்கள் நிறைந்திருக்கிறன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இவை அனைத்துக்கும் அவசியத் தேவையாக இருந்து அவற்றைத் தடையின்றி இயக்கும் கதிரவ மூர்த்திக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் பொங்கல் பண்டிகை இருக்கிறது. வீடுகளில் சூரிய ஒளி வந்து நிறையும் முற்றங்களில் வைக்கப்படும் பொங்கல் படையலின் ஒவ்வொரு செயலிலும் கதிரவ வழிபாடு மறைந்திருக்கிறது.

வெப்பமே ஆதாரம்

மண்பாண்டங்களில் பொங்கல் வைக்கப்படுகிறது. அந்த மண்பாண்டம் என்பது மண்ணால் செய்யப்பட்டு, நெருப்பில் சுடப்படுவது. மண் பானைகளின் உடம்பில் சுண்ணாம்பினால் சூரிய, சந்திர உருவங்கள் வரையப்படுகின்றன. சுண்ணாம்பு என்கிற பொருள் உள்ளுக்குள் நெருப்பு மிகுந்த பொருள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த மண்பாண்டத்தை அடுப்பில் வைத்த பிறகு, அடுப்புக்கான நெருப்பு கற்பூரத்தால் ஏற்றப்படுகிறது.

பொங்கல் பானைகளின் கழுத்தில் சுற்றப்படும் இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகள் ஆகியவை தாவரவியல்ரீதியில் வெப்பத்தை முக்கியக் கூறாகக்கொண்டவை. ஒன்று, வெப்பம் மிகுந்ததால் விளைந்த தாவரம். இன்னொன்று வெப்பம் குறைந்ததால் விளைந்த தாவரம். ‘கதிரவ மூர்த்தியே, எமக்கு நீ மிகுந்தாலும் நன்மை செய்கிறாய், குறைந்தாலும் நன்மை செய்கிறாய். உனக்கு எம் வந்தனங்கள்’ என்பதைச் சொல்லாமல் சொல்வதே பொங்கல் பானைகளில் இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகள் கட்டுவதன் காரணம்.

இயற்கையின் பிரதி

பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் கட்டப்படும் தோரணங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பூக்கள், தாவரங்களைக்கொண்டு வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பூக்களாக, பெரும்பாலான பகுதிகளில் அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பூக்களாக ஆவாரம் பூக்களும், சிறுபீழைப் பூக்களும் இருக்கின்றன. இஞ்சிக் கொத்துகள், மஞ்சள் கொத்துகளைப் போலவே இவ்விரு பூக்களும் வெப்பத்தைப் பெருக்கி, குறுக்கி, தனக்குள் பொதித்து வைத்திருப்பதால் கதிரவ வழிபாட்டில் முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றன. பொங்கலின் அடையாளங்களாக இருக்கும் கரும்பு, வெல்லம், வாழைப்பழம், தேங்காய், பச்சரிசி போன்றவையும் வெப்பத்தை முக்கிய உறுப்புகளாகக் கொண்டவைதாம்.

பொங்கும் மகிழ்ச்சி

பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஆனந்தக் குரலில் ஆரவாரமிட்டு குதூகலிக்கிறோம். பொங்கல் பொங்குவது என்பதே வெப்பத்தின் மிகுதியால்தான். ‘கதிரவனே, உன்னுடைய வெப்பம் மிகுந்ததனால், பானையில் உள்ள இனிப்புப் பொங்கல் பொங்கி வழிகிறது. அதைப் போலவே எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்’ என்பதாகத்தான் ‘பொங்கலோ பொங்கல்’ என்ற குரலும் குலவைச் சத்தமும் ஓங்கி ஒலிக்கின்றன.

கதிரவன் தனது வெப்ப சேவையில் உச்சத்தைப் பெறும் முதல் ஆறு மாதங்கள் ‘உத்தராயணம்’ என்றும், சாந்தத்தைப் பெறும் அடுத்த ஆறு மாதங்கள் ‘தட்சிணாயணம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. உத்தராயணத்தில் கதிரவனின் பார்வை உக்கிரம் வடக்கு நோக்கியும், தட்சிணாயணத்தில் தெற்கு நோக்கியும் இருக்கும் என்றும் கோளியல் அறிஞர்கள் சொல்வதுண்டு. அத்தகைய உத்தராயணம் தொடங்கும் நாளும், தட்சிணாயணம் முடியும் நாளும் பொங்கல் பண்டிகையே ஆகும்.

கதிரவ மூர்த்திக்கு நம்முடைய கடந்த கால வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காக நன்றி சொல்லவும், எதிர்கால வாழ்க்கைக்கான வேண்டுதல்களை முன்வைக்கவும், எல்லோருக்குமான நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டம் காரணம் அமைக்கிறது.

பொங்கல் புராணம் சொல்லும் திருமாந்துறை

மார்கழி மாதத்துப் பனி பொழிகிறது. மா மரங்கள் நிறைந்த காட்டு பகுதி. அங்கே நவகிரங்கள் ஒன்பது பேரும் எதையோ தேடிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒன்பது பேரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரம்மன் கொடுத்த சாபம் காரணமாக அவர்களுக்குத் தொழுநோய் ஏற்பட்டிருந்தது. சாப விமோசனம் பெறுவதற்காக சிவாலயத்தைவந்தடைந்தனர்.

முறைப்படி சிவனைத் தொழுது விரதமிருந்து தவம் இயற்றினர். சரியாக 15-ம் நாள் இறைவனுக்குப் பொங்கல் வைத்து நிவேதனம்செய்து அதைத் தாங்களும் உண்டனர். தொழுநோய் தொலைந்தது. அன்று தை மாதம் முதல் நாள். இறைவனும் காட்சிக் கொடுத்து அருளினார். அந்தத் தலம் திருமாந்துறை. இதுவே தைப் பொங்கல் விழா உருவான புராண வரலாறாகக் கருதப்படுகிறது. இதன்காரணமாக திருமாந்துறையில் பொங்கல் திருநாள் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலுக்கு கிழக்கே இந்த ஊர் உள்ளது. ரோகினி நட்சத்திரம், விருச்சக ராசி அன்பர்களுக்கு உரிய தலம் இது. சந்திரன் பரிகார தலமாகப் பழங்காலம் தொட்டே இருந்துவருகிறது. இங்கு கோயில் கொண்டுள்ளஅட்சய நாதரை வழிபட்டால் நிறைவாய் வாழ முடியும் என்பது நம்பிக்கை.

- சு. நிவேதா

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x