Published : 14 Jan 2018 10:05 AM
Last Updated : 14 Jan 2018 10:05 AM

எங்கள் குலதனம் ஆண்டாள்

மா

ர்கழி முடிந்து உத்தராயண புண்ணிய காலத் தொடக்கமாம் தை மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.

மார்கழி முழுவதும் இறை சிந்தனைக்காக என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ‘அவனை நினைக்காத நாளெல்லாம் பிறவா நாளே’ என்று சொல்லி விட்டு, மார்கழி மாதம் மட்டும்தான் அவனை நினைப்பதற்கு என்றும் பேசுவது முரண்பாடாக இல்லையா? இல்லை. காரணம், இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் மனித மனம்தான்.

தனிப்பெரும் சிறப்பு

மனம் இருப்பவன் மனிதன். மனமோ சலனத்தின் மொத்த வடிவம். இந்த லட்சணத்தில் அது எப்படி பகவத் சிந்தனையில் ஒட்ட முடியும்? இதை நிவர்த்தி செய்வதற்காகத்தான் பெரியவர்கள் ஒருசில தினங்களுக்கு மட்டும் தனிச்சிறப்பு இருப்பதாக ஏற்படுத்தி வைத்தார்கள். இத்தகைய தனிச்சிறப்புகள் நம் மனதைக் கொள்ளை கொள்கின்றன. மனம் பகவத் சிந்தனையில் ஒட்டத் தலைப்படுகிறது.

தலங்களும் இப்படிப்பட்டவையே. அனைத்துத் தலங்களும் புனிதமானவை என்றாலும், ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு விசேஷம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். நம் ஒவ்வொருவர் மனதும் அதனதன் பக்குவத்துக்கு ஏற்ப, பகவானின் தனிச்சிறப்புகள் ஒருசிலவற்றில் மட்டும் லயித்து நிற்கின்றன. சிலருக்கு ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரனின் மீது அதீத ஈடுபாடு ஏற்படுகிறது என்றால், வேறு சிலருக்கோ மதுராவில் ஆட்டமாக ஆடுபவன்தான் ஆனந்தம் தருகிறான்.

மேன்மக்களும் அப்படியே. ஆழ்வார்-ஆசார்யர்கள் அனைவருமே மேன்மையானவர்கள் என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்பு. சில சாதகர்களுக்கு ஆன்ம தேடல் அதிகமாக இருக்கும். இத்தகையவர்களின் மனங்கள் நம்மாழ்வாரின் பாசுரங்களிலேயே மூழ்கிக் கிடக்கும். ஏனெனில், அறிவுத் தேட்டத்துக்கு அதிகத் தீனி போடுவதுதான் நம்மாழ்வாரின் தனிச்சிறப்பு.

அதேபோல, ஒவ்வொருவர் மனப்பக்குவத்துக்கும் ஏற்ற விதத்தில் நின்று அவர்கள் மனங்களை இறை நினைவில் ஒட்ட வைப்பதுதான் ஆண்டாளின் தனிச்சிறப்பு. நான் வில்லிபுத்தூர்க்காரன். ஆண்டாள் எங்கள் குலதனம் என்று சொல்வது எங்களுக்கு வாய்த்த மேன்மை. ஆனால், அவளோ எந்நாட்டவர்க்கும் குலதனமாகத் திகழ்கிறாள் என்பதுதான் அவளது தனிப்பெரும் சிறப்பு.

பரந்தாமன் திருவடி - பூமாதா

ஒவ்வொரு ஜீவனுக்கும் பிறப்பு என்பது தாயின் வழிதான் நடைபெறுகிறது. சாக்ஷாத் பரமாத்மனே மனிதனாக அவதாரம் எடுத்தபோதும் தாயின் கர்ப்பத்தில் வசித்த பின்னர்தான் பிறவி எடுத்தான். தாய்மை என்பது அவ்வளவு விசேஷமானது. ஆனால், ஆண்டாளோ, புவியில் இருந்து நேரடியாக வெளிப்பட்டவள். காரணம், அவள் பூமாதா.

ஆலயங்களில் ஆண்டவனின் திருமேனி அழகை அங்குலம் அங்குலமாக அனுபவித்துக் கண்குளிரத் தரிசிக்கிறோம். இருந்தாலும், அவனது அனைத்து அவயவங்களிலும் திருவடி ரொம்ப விசேஷமல்லவா? இந்தப் பிரபஞ்சமும் பரமாத்மனின் திருமேனிதான். இங்கே அவனது திருவடியாக நிற்பது, அனைத்து ஜீவன்களையும் தாங்கி நிற்கும் பூமாதா அல்லவோ? அவள்தானே ஆண்டாள்.

தாயா, இல்லை இல்லை. அவள் நம் ஒவ்வொருவர் வீட்டுக் குழந்தையல்லவா? அந்தப் பரமாத்மனின் திருநயனங்களைத் திறக்கச் சொல்லும்போதும் இந்தப் பேதைக்குக் கிலுகிலுப்பையின் ஞாபகம்தானே வருகிறது?

குழந்தை மேதை

அட, சிறு குழந்தையா இவள்? இல்லை இல்லை, குழந்தை மேதை அல்லவா? அக்கம் பக்கத்தினர், சுற்றம் அனைவர் மத்தியிலும் தனது அதீதமான திறமைகளை வெளிக்காட்டி அவர்களை வாய்பிளக்கச் செய்து, பெற்றோரின் கண்களில் ஆனந்த பாஷ்பத்தை நிறைக்கும் பிறவி மேதை இவள். வேதம் அனைத்துக்கும் வித்தான திருப்பாவையைத் தனது ஐந்தாம் பிராயத்திலேயே இயற்றியவள் அல்லவா?

குழந்தை மேதையா இவள்? இல்லை இல்லை, சரியான அழிச்சாட்டியம்? பரமாத்மனான பெருமாளுக்கே உரித்தான மாலையானாலும், தன் கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் சுயநலப் பிடுங்கல்காரி.

ஐயய்யோ, இவளா சுயநலக்காரி? பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி என்று வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று ஆய்க்குலச் சிறுமிகளைத் தட்டி எழுப்பி பகவன் நாமாவைப் பாடவைத்தவள் அல்லவா?

வாயாடிப் பிள்ளை

பகவநன் நாமாவை மட்டுமா பாடினாள் வீடுவீடாகச் சென்று வம்பு பேசிய வாயாடிப் பிள்ளை அல்லவா? அம்மா, பரதேவதை, நோன்பு நோற்று சொர்க்கம் போகப்போகிறேன் என்று வாய்ச் சவடால் பேசியவளே, கும்பகர்ணனின் வாரிசாக இருக்கிறாயே, குறட்டைக்காரி என்று ஒருத்தியைக் குத்திக்காட்டுகிறாள். இன்னொருத்தியிடம் வரிந்து கட்டி வம்பிழுத்து ஆள் கணக்குக் காட்டுகிறாள்.

சகவயதுப் பெண்களிடம் வம்பிழுக்கும் வாயாடி மட்டுமல்ல, பெரியவர்களையும் எடுத்தெறிந்து பேசும் ராங்கிக்காரப் பிள்ளை. தோழியின் தாயைப் பார்த்து, உன் மகள் ஊமையா, செவிடா, சோம்பேறியா என்று அடாவடித்தனமாகப் பேசுகிறாள்?

அடாவடியா இவள்? அன்பான நட்புக்காரி அல்லவா? ‘போதரிக் கண்ணினாய், புனமயிலே’ என்றெல்லாம் தோழிகளை அன்புடனும் நட்புடனும் இனிமையாக விளிப்பவள் அல்லவோ?

தோழிகளை மட்டுமா அன்புடன் விளித்தாள்? இவளது குறியெல்லாம் நாராயணன் மூர்த்திதானே? அவனையே மணாளனாக வரித்தவள் அல்லவா? பெரியவர்களுக்குத் தெரியாமல் வெண்ணை திருடும் அந்தத் திருட்டுப் பயலின் வாய் மணத்தை அவனுக்கே தெரியாமல் அவனது கைச்சங்கின் மூலம் அறிய முயலும் திருட்டுப் பிள்ளை ஆயிற்றே இவள்?

இவளது இனிமையையும் காதலையும் தூக்கி உடைப்பில்தான் போட வேண்டும். இந்தப் பிள்ளை சரியான அழுகைக்காரி. ‘மானுடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே’ என்று ஒப்பாரி வைத்து மூக்கைச் சிந்துகிறாள்.

இவளா ஒப்பாரி வைப்பவள்? “எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளைத் திருமகளாகப் பாவித்துச் செல்லமாக வளர்த்தேன், அந்தத் திருட்டுப் பயல் அவளைக் கவர்ந்து போய்விட்டான்” என்று இவளது அப்பாதான் ஒப்பாரி வைக்கிறார். ஆனால், ஆசார்யர்கள் ‘இவளை ராட்சசி’ என்றுதான் வர்ணிக்கிறார்கள். ஆம், விவாக வகைகளில் ராட்சச விவாகம் என்று ஒன்று உண்டு. தனது மனம் கவர்ந்த பெண்ணை ஓர் ஆடவன் வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போய்த் திருமணம் செய்வதுதான் ராட்சச விவாகம். ஆனால், இந்தப் பெண்பிள்ளையோ பெருமாளைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துத் திருமணம் செய்து கொண்டாளாம்.

ராட்சசியாம் ராட்சசி, சரியான தொண்டுக் கிழவி இவள். வயதான பாட்டிமார்கள் பழைய ஞாபகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதுபோல கல்யாணக் கனாக் கண்டதோடு சரி, இவளுக்கு எப்போது கல்யாணம் நடந்தது? கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்தாள், பெருமாளிடம் ஐக்கியமாகி விட்டாள். இதற்குப் பெயரா திருமணம்?

அப்படியும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இவளது அப்பாவை அரங்கனே மாமனார் என்றுதானே அழைக்கிறான்? இவளது திருமணத்துக்குச் சீதனமாக வந்த கைங்கர்யபரர்கள்தானே ஸ்ரீரங்கத்து உத்தம நம்பிகள் வம்சத்தினர்? அதுமட்டுமல்ல, ஆசார்ய புருஷரே இவளுக்கு அண்ணனாக இருந்து, புகுந்த வீட்டுக்குச் சீதனமாக அக்கார அடிசல் அனுப்பி வைத்தாரே?

அப்படியா சேதி, இந்தச் சோம்பேறிப் பெண்ணுக்குச் சர்க்கரைப் பொங்கல்கூட வைக்கத் தெரியாதா? உஞ்சவிருத்திக் கிழவர் வீட்டில் வளர்ந்த இவளுக்குச் சேவை செய்வதற்கு நூற்றுக்கணக்கான பணியாட்கள் தேவையோ?

தப்பு, தப்பு, கன்னத்தில போட்டுக்கணும். ஸஹஸ்ர நாமாக்களையும் இறுக்கிப் பாகாக்கி முப்பது பாசுரங்களாக நறுக்கிக் கொடுத்த சமையல்காரி ஆயிற்றே இவள். ஆம், இவள் பெரிய வேலைக்காரிதான். ஆயர்பாடிக் கண்ணனுக்குத் தொண்டு செய்வதைத் தவிர வேறு எதுவுமே தெரியாத கடின உழைப்பாளி.

பச்சைப்பொய். இவள் தொண்டு செய்யுமளவு பணிவானவள். இல்லவே இல்லை. சரியான திமிர் பிடித்தவள். தாயாரைப் பார்த்து சீக்கிரம் வந்து கதவைத் திறக்க மாட்டாயா என்று சிடுசிடுக்கிறாள். பெருமாளைச் சொடக்குப் போட்டுக் கூப்பிட்டு, சீக்கிரமாய் ரெடியாகி வா, எங்களுக்கு வரத்தைக் கொடு என்று அதிகாரம் பண்ணுகிறாள்.

அப்படியும்கூடச் சொல்ல முடியாது. அவள் அதிகாரம் பண்ணவில்லை, பணிவுடன்தான் பேசுகிறாள். நாங்கள் மாடு மேய்க்கும் அப்பிராணிகள். உனக்கு முறையாகக் கைங்கர்யம் பண்ணுவது எப்படி என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அதனால், நாங்கள் உன்னை மரியாதைக் குறைச்சலாகப் பேசினாலும் நீ கோபப்பட வேண்டாம் என்று சொல்கிறாள்.

இவளா ஒண்ணும் தெரியாத அப்பாவி? இவளா மக்கு? நாங்கள் உன்னை மரியாதை இல்லாமல் பேசினாலும் நீ சீறியருளாதே என்கிறாள். அதென்ன சீறியருளுவது? தமிழை யார்யாரோ எப்படி எப்படியோ நயம்படக் கையாண்டிருக்கிறார்கள். இருந்தாலும், இவளைப்போலத் தமிழ் வார்த்தைகளை உடைத்து, வளைத்து, ஒருங்கிணைத்துத் திறம்பட நிர்வகித்த கவிஞர்கள் யாருண்டு?

சாகாவரம் பெற்ற ஆழ்வார்

என்னது கவியா இவள்? சாகா வரம் பெற்ற ஆழ்வார்களில் ஒருத்தி அல்லவா? அதிலும் குறைதான் தெரிகிறது. இவள் ஆழ்வார்களில் ஒருத்தியா அல்லது ஒரே பெண் ஆழ்வாரா?

இருந்தாலும், வில்லிபுத்தூர்க்காரர்களான எங்களுக்கு அவள் ரொம்பவே சொந்தம். ஏனெனில், நாங்கள் எவ்வளவு சாமானியர்களாக இருந்தாலும், எங்களது ஊர் வில்லிபுத்தூர் என்று சொன்னதுமே, ‘மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருக்கால் சொன்னார் கழற்கமலம் சூடினோம்’ என்று எங்களை வைணவ உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவு ஏற்றம் கொடுத்தது ஆண்டாள், பெரியாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்த பூமி என்பதால்தானே? எனவே அவள் எங்களுக்கு மட்டுமே உரியவள் என்று நாங்கள் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.அவள் மட்டுமே ஒரே சொந்தமாக இருப்பதற்கும், மற்ற ஆசைகள் அற்றுப் போவதற்கும் அவள்தான் அனுக்கிரகிக்க வேண்டும்.

எங்கள் குலதனம்

இப்படி எந்தெந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு வர்ண ஜாலங்களைக் காட்டுவது ஆண்டாளின் தனிச்சிறப்பு. வைணவ சம்பிரதாயம் உலகத்துக்கு அளித்த சொத்துகளில் மிகப்பெரிய சொத்தாகத் திகழும் அவள் நம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதனமாகத் திகழ்கிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x