Published : 03 Nov 2023 07:57 PM
Last Updated : 03 Nov 2023 07:57 PM

திருவாரூர் தேவன்குடி ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் சிறப்பும் உற்சவங்களும்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தேவன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோதண்ட ராமர் கோயிலில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மூன்று நாட்கள் உற்வசவங்கள் நடக்க இருக்கின்றன. அடுத்த ஆண்டு கும்பாபிஷேத்துக்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த உற்சவங்கள் நடைபெற இருக்கின்றன.

கோரையாற்றின் தென்கரை, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமியின் வடகிழக்கு திசையில் அமைந்திருக்கும் கிராமம் தேவன்குடி. இங்கு தனது அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தில் மஹாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். தேவன்குடியில் இருக்கும் இந்தப் புராதனமான கோயிலில் ஸ்ரீ சீதா லக்‌ஷ்மண பரத சத்ருகன ஹனுமத் ஸமேதமாக ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இக்கோதண்ட ராமன் கோயிலானது வானிலை , சீதோஷண தட்ப வெப்பம் போன்ற காரணங்களால் தற்போது பெருமளவில் சிதைவடைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தினசரி பூஜைகள் செய்யப்படாமல் இருந்த நிலையில் சில வருடங்களாக ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது.

கோயிலில் கடந்த 1942-ம் வருடம் கும்பாபிஷகம் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு (2024) நாம நவமிக்குள் கோதண்ட ராமன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் மற்றும் கோயில் சீரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இதனிடையே, நவம்பர் 16-ம் தேதி மதியம் முதல் விஷ்ணுபதி புண்ணிய கால உற்சவங்கள் தொடங்க உள்ளது. 17-ம் தேதி ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. 18-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சம்ப்ரோக்‌ஷணம் வெற்றிகரமாக நடைபெறவும் உலக மக்கள் க்‌ஷேமத்திற்கும் பகவான் ஸ்ரீராமர் அருள் வேண்டி அகண்ட ராம நாம ஜபம் நடக்க இருக்கிறது. இந்த மூன்று நாட்களுக்கும் பிரசாத விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தல புராணம்: முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது. ஸ்ரீ காஞ்சி பரமாச்சார்யாள் இங்கு தங்கி இந்த இந்திரபுரீஸ்வரரை வழிபாட்டு பூஜித்திருக்கிறார். அதேபோல் முற்காலத்தில் இந்த ராமர் கோயிலில் கண் தெரியாத ஒருவர் ப்ரதக்‌ஷிணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால் தன்னுடைய நிலங்களை இந்த கோயிலுக்கு நன்றியுடன் கொடுத்துவிட்டதாக கூறுவதுண்டு. அதனால் இந்த ராமருக்கு "கண் கொடுத்த கோதண்டராமர்" என்கிற பெயரும் உண்டாயிற்று.

இந்த தேவன்குடியில் காசி தாத்தா என்பவரால் கடந்த 1909-ல் துவக்கப்பட்டு, 1916-ம் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பஜனை மண்டலி உள்ளது. இங்கு ஏகாதசி மற்றும் பெருமாள் விசேஷ தினங்களில் இன்று வரை தவறாமல் சம்பரதாய பஜனைகள் இக்கிராமதினரால் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x