Last Updated : 18 Jan, 2018 10:42 AM

 

Published : 18 Jan 2018 10:42 AM
Last Updated : 18 Jan 2018 10:42 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: ஒரு மீனின் வயிற்றுக்குள் இருந்தார்

யேசு, கடவுளின் சக்தியால் அற்புதங்களைச் செய்கிறார் என்பதை யூத மதத் தலைவர்களும் வேத அறிஞர்களாகத் தங்களைக் கருதிக்கொண்ட பரிசேயர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். கடவுளின் சக்தியைக்கொண்டு நல்ல செயல்களை மட்டுமே செய்ய முடியும் என்பதை அவர்கள் உணரவில்லை. அதனால் இயேசு, “நீங்கள் நல்ல மரமாக இருந்தால் நல்ல கனியைக் கொடுப்பீர்கள்; கெட்ட மரமாக இருந்தால் கெட்ட கனியைக் கொடுப்பீர்கள்; ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியைக் கொண்டே அறிந்துகொள்ளலாம்” என்கிறார். ஆனால், அப்படியும் அவர்கள் மனம் திருந்தவில்லை. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிவரும் தங்களின் பிழைப்புக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று இயேசுவின் வளர்ச்சியைக் கண்டு பயந்தார்கள். இயேசுவை எந்த வகையிலாவது குற்றமுள்ளவராகக் காட்டி அவரை எப்படியாவது தண்டித்துவிட விரும்பினார்கள்.

எங்கள் முன்பாக ஓர் அற்புதம் செய்

இயேசு ஏற்கெனவே பல அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், யூத மதத் தலைவர்களுக்கும் பரிசேயர்களுக்கும் அவை போதுமானவையாக இல்லை. இத்தனைக்கும் அவர் அற்புதங்கள் செய்வதை அவர்களே நேரில் பார்த்திருக்கிறார்கள். இருந்தும் இயேசுவைச் சோதிப்பதற்காக சில யூதத் தலைவர்களும் பரிசேயர்களும் அடங்கிய குழுவினர் அவரிடம் வந்தார்கள். அவர்கள் இயேசுவிடம், “ நீர் கடவுளின் மகன் என்பதை நிரூபிக்க எங்கள் முன்பாக அற்புதம் ஒன்றை நிகழ்த்திக் காட்டும். அதையே நாங்கள் அடையாளமாகக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “சூரியன் மறைவதை நீங்கள் காணும்பொழுது, காலநிலை எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். செவ்வானமாயிருந்தால், நல்ல காலநிலை என்கிறீர்கள். உதயத்தில் வானம் இருண்டும் சிவந்துமிருந்தால், மழை பெய்யும் என்கிறீர்கள். இவை காலநிலையின் அறிகுறிகள். அதைப் போலவே, தற்போது நடப்பவற்றை நீங்கள் கண்டு வருகிறீர்கள். இவையும் அறிகுறிகளே. ஆனால், இவற்றின் பொருளை நீங்கள் அறியவில்லை. தீயவர்களும் பாவிகளும் அற்புதங்களை அறிகுறிகளாகத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, ‘யோனா’வின் அடையாளத்தையன்றி வேறெந்த அடையாளமும் கிடைக்காது” என்று கூறினார். பின் இயேசு அவர்களை விட்டு அகன்றார். இயேசு யோனாவின் அடையாளம் என்று கூறியதன் பொருளை அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மீனின் வயிறும் கல்லறையும்

‘யோனா’ அடையாளம் என்பதை பரிசேயர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக வேதத்திலிருந்து யோனாவின் வாழ்க்கையை அவர் எடுத்துச் சொன்னார். ‘இரவு பகலாக மூன்று தினங்கள் யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருந்தார். அதைப் போலவே இறைமகனாகிய இயேசுவும் இரவு பகலாக மூன்று நாட்களுக்குக் கல்லறைக்குள் இருப்பார்’ என்கிறார். யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கியது. பிறகு, இறந்து உயிர்த்தெழுந்ததைப் போல அதன் வயிற்றிலிருந்து யோனா உயிருடன் வெளியே வந்தார். அதைப் போல, தானும் இறந்த, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படப்போவதாக இயேசு கூறினார். அதைப் போலவே இயேசு பிற்பாடு உயிர்த்தெழுந்தபோது, இந்த ‘யோனாவின் அடையாளத்தை’ யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மனம் மாறவும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x