Published : 11 Jan 2018 09:02 AM
Last Updated : 11 Jan 2018 09:02 AM

மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி!

திருப்பள்ளியெழுச்சி

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;

மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !

செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;

ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

அதாவது, முன்னரே இருக்கும் துவக்கமும், இடை நிலையும், இறுதியும் ஆனவரே!

உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும்?

(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்

அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த

(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே!

சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,

திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும் காட்டி என்னை ஆண்டாய் என்கிறார் மாணிக்கவாசகர்.

விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க என்று தன் பக்தியை வெளிப்படுத்தி, பரமேஸ்வரன் அருள்பாலிக்க வேண்டும் எனும் கோரிக்கையையும் வைக்கிறார் மாணிக்கவாசகர்.

(மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற).

இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடலை, தினமும் பாடுங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்திப் பாடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ வெண் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டுங்கள். வேண்டுவன எல்லம் தந்தருள்வார் ஈசன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x