Published : 02 Jan 2018 12:14 PM
Last Updated : 02 Jan 2018 12:14 PM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 18

உந்து மத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோபன் மருமகளே! நம்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட

செந்தாமரைக் கையால் சீராலை வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேரோ லெம்பாவாய்!

அதாவது, மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டவன். தம்மை எதிர்க்க வரும் பகைவர்களைக் கண்டு அஞ்சி ஓடாமல், அவர்களை எதிர்கொண்டு போர் புரியும் வலிமையான தோள்களையும் மன உறுதியையும் கொண்டவன் நந்தகோபன்!

அப்படிப்பட்ட நந்தகோபனின் மருமகளாகிய நப்பின்னையே! (நப்பின்னை என்பவள் கண்ணபிரானுக்கு முறைப்பெண் என்றொரு குறிப்பு உள்ளது. எனவே, கண்ணன் மீது காதல் கொண்ட நம்பின்னையும் கண்ணனின் திருமாளிகையில் தங்கியிருந்தாள் என ஆண்டாள் நினைத்திருக்கலாம்). நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக!

பொழுது புலர்ந்ததற்கு அடையாளமாக கோழிகள் கூவிய சத்தம் எங்கும் கேட்கின்றன. குருக்கத்திப் பூக்கள் எனும் பூக்கள் நிறைந்துள்ள பந்தலின் மீது அமர்ந்து, குயில்கள் பல முறை விடாமல் கூவுகின்றன. கண்ணபிரானுடன் மலர்ப்பந்தைக் கொண்டு விளையாடி வருபவளே! பந்து விளையாடும் விரலை உடையவளே! உன் கணவன் கண்ணனின் நாடகத்தைப் புகழ்ந்து, நாங்கள் பாடிக்கொண்டு அவன் திருமாளிகை வாசல் வந்திருக்கிறோம்.

நீ உனது செந்தாமரை மலர் போன்ற கைகளில் உள்ள வளையல்களின் ஓசைகள் ஒலிக்கும் கைகளால், மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறப்பாயாக என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

இந்த திருப்பாவைப் பாடலை, தினமும் பாடி பரந்தாமனை வணங்குங்கள். வாழ்வில் குன்றாத செல்வமும் குறையாத மகிழ்வும் தந்து நம்மை உய்விப்பான் மாலவன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x