

இதோ... மார்கழி நிறைவு பெற... தைமாதப் பூ பூக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இன்று 12ம் தேதி, மார்கழி மாதத்தின் நிறைவு வெள்ளிக்கிழமை. அற்புதமான நாள்.
மார்கழி மாதம் என்பதே இறைவனுக்கு பூஜிப்பதற்கு உரிய அருமையான மாதம். இந்த மாதத்தில், சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் தினமும் செய்து வருவோம். அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் வருவோம்.
அங்கே நடைபெறும் பூஜைகளிலும் பாராயண ஜப தபங்களிலும் கலந்து கொள்வதும் வழிபடுவதும் மனதுக்கு நிம்மதியைத் தரும். மங்கலகரமான காரியங்கள் இனிதே நடந்தேறும்.
இந்த மார்கழி மாதத்தில், கலை முதலான விஷயங்களையும் யோகா முதலான மனம் மற்றும் உடற்பயிற்சியையும் தொடங்கிக் கற்றுக் கொண்டால் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்பார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பொதுவாகவே மார்கழி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அம்பிகையை வழிபடுவதும் அவளை ஆராத்தித்து பூஜைகள் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியவை.
இதோ... இன்று 12ம் தேதி மார்கழியின் நிறைவு வெள்ளிக்கிழமை. இந்த அற்புதமான நாளில், தேவி தரிசனம் தெம்பூட்டும், மனதிலும் இல்லத்திலும் ஒளியேற்றும். செந்நிற மலர்களை அம்பாளுக்கு அணிவித்து, நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.
அப்படியே ராகுகால வேளையில் (10.30 முதல் 12 மணி வரை) துர்கைக்கும் தீபமேற்றி வழிபடுங்கள். முடிந்தால், எலுமிச்சை மாலை சார்த்துங்கள். மார்கழி கடைசி வெள்ளியில் செய்கிற இந்த வழிபாட்டால், தை மாதம் பிறந்ததும் நல்ல நல்ல வழிகள் கிடைக்கும் என்பது உறுதி!