

அயோத்யா: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தனது விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் முதல் வாராணசியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற் கொண்டார்.விரதத்தை நிறைவு செய்து அண்மையில் அயோத்யா நகரம்சென்று நவராத்திரி அனுஷ்டானத்தை கடைப்பிடித்தார்.
ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம், பிரமோத்வனத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் நித்யசந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்து முடித்ததும், ஸ்ரீ விஜயேந்திரர் அயோத்யா தாம், ராம ஜென்ம பூமி தலத்தில் அமைந்துள்ள ராம்லல்லா கோயிலுக்கு வந்தார். ராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள், சுவாமிகளை வரவேற்றனர்.
ராம்லல்லா கோயிலில் ஸ்ரீ விஜயேந்திரர் சிறப்பு பூஜைகள் செய்தார். ராம அஷ்டோத்திர அர்ச்சனை, தீபாராதனை, சாமர சேவை முதலானவற்றை நிகழ்த்தியதும், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.
கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆசிவழங்கிய சுவாமிகள், கோயில்கட்டுமானப் பணிகள் குறித்து,அவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாலை பூஜைகளை செய்வதற்காக, ஸ்ரீ விஜயேந்திரர் சங்கர மடம் திரும்பினார்.