

மதுரை: அழகர்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் அமைந்துள்ள நூபுர கங்கையில் நேற்று கள்ளழகருக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெற்றது.
கள்ளழகர் கோயிலில் தைலக் காப்பு உற்சவம் அக்.24-ம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான நேற்று, நூபுர கங்கையில் நீராடுவதற்கு காலையில் இருப்பிடத்திலிருந்து பரிவாரங்களுடன் மலைக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் அனுமார் தீர்த்தம், கருட தீர்த்தங்களில் பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயில் மாதவி மண்டபம் உள்ளிட்ட உட்பிரகாரம் முழுவதும் சுமார் 500 கிலோவுக்கு ஆப்பிள்,
ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, திராட்சை என பழ வகைகளும் மற்றும் 200 கிலோ பல வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னர், ராக்காயி அம்மன் கோயிலில் உள்ள நூபுர கங்கையில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டு, நூபுர கங்கையில் நீராட்டப்பட்டது.
சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெற்றன. தைலக்காப்பு உற்சவம் முடிந்து, மாலையில் மலையிலிருந்து பெருமாள் இருப்பிடத்துக்கு திரும்பினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.