

கிருஷ்ணகிரி: நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் நேற்று வன்னிமரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, நகரில் உள்ள 15 கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தேரில் வீதி உலா வந்து ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நவராத்திரி விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களில் கொலு பொம்மைகள் வைத்து 9 நாட்கள் நவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் அம்மன் அலங்காரம், துர்க்கை பூஜை உள்ளிட்டவை நடந்தன. விஜய தசமியின் மறுநாளான நேற்று நவராத்திரி நிறைவு விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் நேற்று காலை வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, விஜய தசமி நாளான நேற்று முன்தினம் இரவு பழையப்பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், தர்மராஜா கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், டி.பி ரோடு பட்டாளம்மன் கோயில், கவீஸ்வரர் கோயில், ராமர் கோயில், காட்டி நாயனப்பள்ளி முருகர் கோயில்,
புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில், சோமேஸ்வரர் கோயில், படவட்டம்மாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஞான விநாயகர் கோயில், கல்கத்தா காளிக்கோயில் ஆகிய 15 கோயில்களில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி விடிய விடிய நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அனைத்து தேர்களும் நேற்று காலை 7.30 மணி அளவில் பழையபேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் 15 கோயில் உற்சவ மூர்த்திகளையும் வழிபட்டனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள் முன்னிலையில் வன்னிமரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அசுரன் மகிஷனை, துர்க்கா தேவி அழிக்க முயன்றபோது, மகிஷன் வன்னி மரத்தின் பின்னால் மறைந்த போது, துர்க்கை தேவி வன்னி மரத்தை வெட்டி அசுரனை அழித்ததை நினைவூட்டும் வகையில் வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், வன்னிமரத்தை வணங்குவதால், வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும், வன்னிமரத்தின் இலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது. இதனால், வன்னிமரம் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் வன்னிமரத்தின் இலைகளை பறித்து தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, ஆந்திர, கர்நாடக மாநிலங் களிலிருந்தும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.