

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் விடிய விடிய அம்மன் வீதியுலா நடைபெற்றது. பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டுவரும் நவராத்திரி விழாவையொட்டி செங்கல்பட்டில் 10 நாள் தசரா திருவிழா நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டுவரும் இவ்விழா, கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
கலசம் நிறுத்தப்பட்டு, கரகம் அம்மன் சிலைகளை வைத்து அந்தந்த கோயில்களைச் சேர்ந்த தசரா குழுவினரால் இவ்விழாகொண்டாடப்பட்டது. ஜவுளிக்கடை தசரா, பூக்கடை தசரா, பலிஜகுல தசரா என செங்கல்பட்டில் 20-க்கும் மேற்பட்ட இடத்தில் 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தசரா திருவிழாவின் 10-ம் நாள் (அக். 24-ம் தேதி)இரவு சூரனை வதம் செய்து வெற்றியைக் கொண்டாடும் வகையில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று விடியற்காலை வீதியுலாவின்போது பாரம்பரிய வன்னிமரம் குத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெரிய நத்தம் ஓசூரம்மன் கோயில், மதுரைவீரன் கோயில், கைலாசநாதர் கோயில், சின்னநத்தம் சுந்தரவிநாயகர் கோயில், நெடுஞ்சாலை முத்துமாரியம்மன் கோயில், நெடுஞ்சாலை அங்காளம்மன் கோயில், ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயில், மார்க்கெட் சின்னம்மன் கோயில், அண்ணா நகர் எல்லையம்மன் கோயில், ரத்தினவிநாயகர் கோயில், புது ஏரி செல்வகணபதி முத்துமாரியம்மன் கோயில், அனுமத்தபுத்தேரி செல்வவிநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் 10 நாட்களுக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்றது.