பவித்திரம் அச்சப்பன் கோயில் திருவிழாவில் சாட்டையால் அடித்து ‘பேய் விரட்டும்’ நிகழ்ச்சி

பவித்திரம் அச்சப்பன் கோயில் விழாவின் ஒரு பகுதியாக நேர்த்திக் கடன் நிறைவேற கைகளை கூப்பியபடி மண்டியிட்டிருந்த பெண்களை கோயில் பூசாரி சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பவித்திரம் அச்சப்பன் கோயில் விழாவின் ஒரு பகுதியாக நேர்த்திக் கடன் நிறைவேற கைகளை கூப்பியபடி மண்டியிட்டிருந்த பெண்களை கோயில் பூசாரி சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் அருகே, அச்சப்பன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அச்சப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமியன்று திருவிழா நடப்பது வழக்கம். இரு தினங்கள் நடைபெறும் விழாவின் முக்கிய அம்சமாக முதல் நாளன்று ‘பேய் விரட்டும்’ நிகழ்ச்சி நடைபெறும்.

அதில், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் வேண்டுதல் நிறைவேறக்கோரி பங்கேற்பர். குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வர். அவ்வாறு பங்கேற்கும் பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள திறந்த வெளியில் கைகளை மேலே கூப்பியபடி மண்டியிட்டிருப்பர். அவர்களை கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்ட நபர் பிரம்மாண்டமான ஆளுயர சாட்டையால் அடித்தபடி செல்வது வழக்கம்.

அப்போது, உடலில் இருந்து தீய சக்திகள் வெளியேறிவிடும். குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்பது மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையாகும். இந்தாண்டுக்கான கோயில் திருவிழா விஜய தசமியான நேற்று தொடங்கியது. முதல் நாள் விழாவான நேற்று கோயில் வளாகத்தில் மதியம் முதல் ஆயிரக் கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தங்களது கைகளை மேலே கூப்பியபடி நீண்ட தூரத்துக்கு மண்டியிட்டிருந்தனர்.

அப்போது ஆளுயர சாட்டையை ஏந்தி வந்த கோயில் பூசாரி, கோமாளி வேடமிட்ட நபர் ஆகியோர் பக்தர்களின் கைகளில் சாட்டையை சுழற்றிச் சுழற்றி அடித்தனர். சிலர் ஒரு அடியுடன் எழுந்து சென்றனர். ஒரு சிலர் சாட்டையால் பல அடிகள் வாங்கிய பின்னரே எழுந்தனர். தொடர்ந்து பாரம்பரிய சேர்வை நடனம், தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள் சிலர் கூறியதாவது: அச்சப்பன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பேய் விரட்டுதல் நடைபெறும். இதில், திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காகவும், உடலில் உள்ள தீய சக்திகள் வெளியேற வேண்டும் என்பதற்காகவும் அதிகளவு பக்தர்கள் கலந்து கொள்வர். வேண்டுதல் நிறைவேறியவர்களும் இதில் பங்கேற்பர். 2- வது நாள் கோயில் வளாகத்தில் கிடா வெட்டு, விருந்து நடைபெறும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in