

விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க மகர்நோன்பு திரு விழா நேற்று புலியாட்டத்துடன் நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜய தசமியன்று, இத்திருவிழா அனைத்து சமுதாயத்தினராலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் பராசக்தி மாரி யம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை அடுத்து நடத்தப்படும் பெரிய விழா இந்த மகர்நோன்புத் திருவிழா.
நேற்று காலை மதுரை சாலையில் வன்னி வனம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தங்கக் குதிரை வாகனத்தில் சொக்க நாத சுவாமி எழுந்தருளினார். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி சொக்கநாத சுவாமி எட்டுத் திக்கிலும் அம்பு எய்தினார்.
இந்த அம்பை பிடிக்கவும், அதை எடுத்துச் செல்லவும் பக்தர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, காலையில் தேவர், யாதவர், நாயக்கர் இனத்தவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை தேர்வு செய்து அவருக்கு புலி வேடமிட்டு தங்கள் பகுதியிலிருந்து மதுரை சாலையில் மேளதாள வாத்தியம் முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அவரோடு சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் சிலம்பம் சுற்றிக் கொண்டும், குஸ்தி போட்டுக் கொண்டும் வந்தனர். அவர்களோடு அச்சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஊர்வலத்தில் வந்தனர். அப்போது மேற்கு காவல் நிலையம் முன்பாக புலி வேடமிட்டவர் காவல் அதிகாரிகள் முன்பு வீர சாகசங்களை செய்து காட்டினார். டிஎஸ்பி பவித்ரா உட்பட அதிகாரிகள் இதில் பங் கேற்றனர். மாலையில் நாடார் சமூகத்தினர் புலி வேடமிட்ட நபருடன் ஊர்வலம் வந்தனர்.
அச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மதுரை சாலையிலுள்ள நந்தவனத்திலும் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் கூடியிருந்தனர். இது நாடார் சமூகத்தினருக்கான பெண் பார்க்கும் படல நிகழ்ச்சியாக நடந்தது. இளம் பெண்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். உறவினர்கள் மூலம் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொண்டனர்.
இது குறித்து, விழாவில் பங்கேற்றவர்கள் கூறுகையில், இவ்விழாவில் யார் வீட்டில் பெண் உள்ளனர் என மாப்பிள்ளை வீட்டார் தெரிந்து கொள்வர். பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்று முறையாக பேசி முடித்து சம்பந்தம் செய்து கொள்வர். பாரம்பரியமாக இந்த விழா நடத்தப்படுகிறது என்றனர். இந்த விழாவையொட்டி விருதுநகரே நேற்று விழாக் கோலம் பூண்டிருந்தது.