

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம்முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் உள்ள முத்தலாம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கான பல்லி சகுனம் கேட்கும் நிகழ்ச்சி செப்.1-ம் தேதி நடைபெற்றது. உத்தரவு கிடைத்ததையடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. அக்டோபர் 15-ம் தேதி சாட்டுதல் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருக்கத் தொடங்கினர்.
விழா நாட்களில் தினமும் மாலை உற்சவர் மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அம்மனின் திருவுருவத்தில் கண் திறப்பு வைபவம் நடைபெற்றது. கண் திறப்பைத் தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, கொலு மண்டபத்துக்கு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று அருள் பாலித்தார். அன்று இரவு புஷ்ப விமானத்தில் உலா வந்து வானகாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் வாண வேடிக்கைகள் நடந்தன. நேற்று சொருகுப் பட்டை சப்பரத்தில் உலா வந்து, பல்வேறு திருக் கண்களில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தாடிக் கொம்பு, அகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.