களைகட்டியது தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்

தசரா திருவிழாவை முன்னிட்டு  குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு வேடமணிந்து வலம் வந்த பக்தர்கள்.படம்: என்.ராஜேஷ்
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு வேடமணிந்து வலம் வந்த பக்தர்கள்.படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக். 24) நள்ளிரவு நடைபெறுகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா விமரிசையாகக் கொண் டாடப்படுகிறது.

கடந்த 15-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் இரவு சிம்மம், கற்பகவிருட்சம், ரிஷபம், மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. நேற்று இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வந்தார். 9-ம் நாளான இன்று (அக். 23) அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா வருகிறார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் குடில் அமைத்து, கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கின்றனர்.

தசரா விழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரன் சம்ஹாரம் நாளை நள்ளிரவு நடைபெறுகிறது. இதையொட்டி, நாளை நள்ளிரவு12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளி, மகிசாசூரனை சம்ஹாரம் செய்வார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

வரும் 25-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனை நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடி இறக்கப்படும். பக்தர்கள் காப்பு களைந்து, விரதத்தை நிறைவு செய்வார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in