

மதுரை: புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான இன்று அழகர்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக பங்கேற்று வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல் மதுரையிலுள்ள பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையான இன்று அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்து வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோயிலில் கொடிமரம் அருகே பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.
மேலும், 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் சந்தனம் சாற்றி வழிபட்டனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் நடந்த கலை நிகழ்ச்சிகளை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.அதேபோல், மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் வியூக சுந்தரராஜபெருமாள் அருள்பாலித்தனர்.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.