தஞ்சை பெரியகோயில் சதய விழா - பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்

தஞ்சை பெரியகோயில் சதய விழா - பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்
Updated on
1 min read

தஞ்சை: தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா அக்டோபர் 24-ம் தேதி தொடங்கப்படவுள்ளதையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பெரியகோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை, அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா அக்டோபர் 24ம் தேதி தொடங்கி சதய நட்சத்திர நாளான 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இந்த விழா அரசு விழாவாக நடைபெறும். இந்த 2 நாள் விழாவில் பட்டி மன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்பட பல கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்காரமும் நடைபெறவுள்ளன.

இதனையொட்டி, பெரியகோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. பந்தக்காலுக்கு 16 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன், உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர் ப.மாதவன், நகை சரிபார்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in