Last Updated : 18 Jan, 2018 10:42 AM

 

Published : 18 Jan 2018 10:42 AM
Last Updated : 18 Jan 2018 10:42 AM

துளி சமுத்திரம் சூபி 14: எதுவுமாக அன்றி இறக்கவே விரும்புகிறேன்

நோ

க்கம்தான் அறிவின் தொடக்கம். பிறகு அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்; கேட்டதைப் புரிந்துகொள்ள வேண்டும்; புரிந்ததைச் செயல்களாக்க வேண்டும்; செயல்களை நம் இயல்பாக மாற்ற வேண்டும். நம் இயல்பாக மாறியபின் மட்டுமே அதை நாம் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாகத் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட சூபி ஞானி அப்துல்லாஹ் இப்னு முபாரக்.

அப்துல்லாஹ் 736-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மர்வ் நகரில் பிறந்தார். அவர் தந்தை துருக்கியையும் தாயார் பாரசீகத்தையும் சார்ந்தவர்கள். ஏழையாக இருந்த அவர் தந்தை, அப்துல்லாஹ் பிறந்த நேரத்தில் மிகப் பெரிய செல்வந்தராக மாறியிருந்தார். தந்தைக்கு மகனைத் தன்னைவிடப் பெரிய செல்வந்தர் ஆக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், மகனின் ஆசையோ கேளிக்கைகளில் இருந்தது. இறுதியில் காலம் நிகழ்த்திக்காட்டியதோ அவர்கள் இருவருமே நினைத்திராத ஒன்று.

அப்துல்லாவுக்குச் சிறு வயதிலேயே சிறந்த கல்வி போதிக்கப்பட்டது. மர்வ் நகரிலிருந்த ஆகச் சிறந்த ஆசான்கள் மூலம் இலக்கியமும் இலக்கணமும் வணிகமும் அவர்மேல் திணிக்கப்பட்டன. செல்வமும் அறிவும் அவர் நாட்களை நிரப்பிச் சென்ற காலகட்டம் அது. சிறுவயது முதலே அவர் மின்னும் அறிவாற்றலையும் கூரிய நினைவாற்றலையும் வரமாகப் பெற்றிருந்தார். எனவே, கற்பது ஒருபோதும் அவர் அறிவுக்குச் சவால் அளிப்பதாக இல்லை. இதனால் வளர வளரக் கற்றலிலில் மோகம் குறைந்து நண்பர்களுடன் சுற்றும் ஆவல் மிகுந்தது. அப்போது அவருக்குக் கிடைத்த தட்டுப்பாடற்ற பணம் நண்பர்களின் எண்ணிக்கையைப் பெருக்கியது. கேளிக்கைகளில் மூழ்கித் தான் வீழ்ந்தது மட்டுமில்லாமல் தன்னுடன் இருந்த நண்பர்களையும் வீழ்த்தினார்.

புத்துயிர் பெற்ற இதயம்

மட்டற்ற அறிவையும் தடையற்ற கேளிக்கைகளையும்விடச் சிறிதளவு நற்குணம்தான் ஒரு மனிதனுக்குத் தேவையென்று திடீரென்று உணர்ந்தார். அதன் பின் அவருக்கு அன்றாடம் சலிப்பை ஏற்படுத்தியது. அவரது வாழ்வும் தன் திசையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தது. கேளிக்கைச் செயல்களில் மூச்சுவிடத் திணறிய அவரது இதயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. நல்ல மனிதர்களிடம் நாட்டம் ஏற்படத் தொடங்கியது. சிந்தனையில் மூழ்கி நீந்துவது அவருக்குப் பிடித்த பொழுதுபோக்காக மாறியது.

‘அறிவை நாடிச் செல்லும் வரைதான் ஒருவன் அறிவாளியாக இருக்க முடியும். ஆனால், தன்னை அறிவாளி என்று உணரும் அக்கணமே அவன் அறிவற்றவனாக மாறிவிடுவான்’ என்ற எண்ணம் ஒரு நாள் தீவிர சிந்தனையில் இருக்கும்போது அவருக்கு உதித்தது. அந்த எண்ணம் அவர் அறிவைச் சவாலுக்கு அழைத்தது. இதுவரை தான் கேட்டதும் பார்த்ததும் கற்றதும் புரிந்ததும் தனக்குத் தெரியாதவற்றுடன் ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை என்று அவருக்குத் தோன்றியது. தன் இயல்பான அறிவாற்றலும் நினைவாற்றலும் தேடித் தெரிவதற்கே அன்றி, போதும் என்று எண்ணத்தில் விரயம் செய்வதற்கல்ல என்று எண்ணினார். அறிவைத் தேடி வளர்த்து அதனைப் பரப்புவதே இனி தனது வாழ்வின் நோக்கம் என்று முடிவு செய்தார்.

உயிர்ப்புடன் தொடர்ந்த தேடல்

அந்த நேரம் அவர் தந்தை அவரிடம் ஐம்பதாயிரம் திர்காம் பணம் கொடுத்து ஏதேனும் தொழில் செய்யும்படி சொன்னார். இவர் அந்தப் பணம் முழுவதும் கரையும்வரை அறிவைத் தேடி நீண்ட பயணங்கள் மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் அவரைவிட அதிகமாக அறிவுத் தாகம் கொண்டோர் யாருமில்லை என்றே சொல்லலாம். அவர் ஏமன், எகிப்து, சிரியா, ஹிஜாஷ், பஸ்ரா, குஃபா ஆகிய இடங்களுக்குச் சென்று அறிவை அள்ளி அள்ளிக் குடித்தார். கொடுப்பவரின் வயதோ வசதியோ அறிவாற்றலோ அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர் கொடுப்பது மட்டும்தான் அவர் மனதுக்குத் தெரிந்தது. பெறுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தனக்குத் தெரிந்ததையும் அவர்களிடம் பகிர்ந்து அவர்களின் தேடலை உயிர்ப்போடு இருக்கும்படி செய்தார்.

இவர் எண்ணற்ற ஆசிரியர்களிடமிருந்து அறிவைக் கற்றார். ஆனால், அந்தக் கற்றலின் முடிவில் அந்த ஆசிரியர்களே அவரின் சீடராகும் சூழல் ஏற்பட்டது. இவர் போகும் இடமெல்லாம் இவரது புகழ் முந்திச் சென்று இவரை வரவேற்றது. முதலில் அதற்கு அப்துல்லாஹ் சிறிது மயங்கினாலும் விரைவிலேயே அதிலிருந்து தெளிந்து மீண்டார். “உண்மையின் பாதையில் செல்வதற்குத் தெளிவற்றவற்றின் மீதான காதலை வளர்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்குப் புகழின் ஆரவார ஓசைகளிலிருந்து ஓடி ஒளிந்து ஒரு மரத்தின் வேரைப் போன்று மறைந்திருக்க வேண்டும்” என்று எண்ணினார். அதன் பின்னான பயணங்களில் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டார்.

பணம் கரைந்த பின் மீண்டும் தந்தையைச் சந்தித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற தந்தை அவரிடம் தொழில் பற்றி விசாரித்தார். தான் மேற்கொண்ட பயணங்களையும் பெற்ற அறிவையும் விளக்கினார். பின் அவற்றின் மூலம் தான் எழுதிய புத்தகங்களைக் காட்டி இதுதான் தொழிலென்று அப்துல்லாஹ் சொன்னார். தந்தை அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவரிடம் “நோக்கம் சரியானதாக இருந்தால் சிறிய செயலும் உயர்வானதாக மாறும். நோக்கம் தவறானதாக இருந்தால் உயர்ந்த செயலும் தரம் தாழ்ந்த ஒன்றாகிவிடும்” என்று கூறினார். ஈரம் துளிர்த்த விழிகளுடன் தந்தை எழுந்து உள்ளே சென்றார். திரும்பி வரும்போது வீட்டிலிருந்த பணம் அனைத்தும் அவர் கைகளிலிருந்தது. அதனை அப்துல்லாவிடம் கொடுத்துத் தொழிலை இன்னும் சிறப்பாகச் செய்யும்படி சொல்லிச் சோகத்துடன் மீண்டும் உள்ளே சென்றார்.

தந்தையின் மகிழ்ச்சிக்காக வணிகத்தில் ஈடுபட்டு, தந்தைக் கொடுத்ததைவிட பன்மடங்கு செல்வத்தை ஈட்டினார். வணிகப் பயணங்களில் பணத்தை மட்டுமல்லாமல் அறிவையும் பெருக்கினார். அவர் தந்தை விரும்பியவண்ணம் செல்வத்தின் அளவு பன்மடங்கு பெருகியது. ஆனால், அந்தச் செல்வத்தைப் பெரும்பாலும் தன் பயணச் செலவுகளுக்கே பயன்படுத்தினார். எஞ்சியதை உதவி தேவைப்படுவோருக்குத் தானமாகக் கொடுத்தார். அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனால், அந்தப் புத்தகங்களின் பெயர்கள் மட்டும் தான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் புத்தகங்கள் இருக்குமிடம் இன்றும் தெரியவில்லை. ஒருவேளை அவை அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கலாம்.

வெறும் தரையில் மரித்தவர்

செல்வத்தை ஈட்டுவதிலும் அறிவைப் பெறுவதிலும் அவற்றைப் பகிர்தலிலும் மட்டும் தன் வாழ்வை அவர் சுருக்கிக் கொள்ளவில்லை. அவர் நாட்டுக்காகப் பல போர்களிலும் பங்கேற்றுத் தன் கடமையை ஆற்றியுள்ளார். 797-ம் வருடம் ரமலான் மாதத்தில் நடந்த ஒரு போரில் பலத்த காயமுற்றார். அவர் தன் உதவியாளர் நஸிருடன் குதிரையில் திரும்பி வரும்போது மரணம் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தார். நஸிரை அழைத்துத் தன்னை வெறும் தரையில் தலை மண்ணைத் தொட படுக்க வைக்கும்படி உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்ற மறுத்து “பட்டு மெத்தைகளில் தூங்கும் நீங்கள் ஒரு அனாதையைப் போன்று வெறும் தரையில் படுத்திருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்று சொன்னபடி நஸிர் கதறி அழுதார். “செல்வந்தனாக வாழ்ந்த நான் ஒரு பிச்சைக்காரனாக எதுவும் இல்லாமல் இறக்கவே விரும்புகிறேன். நானாகப் பேசும்வரை எதுவும் பேசாதே. எனவே, இப்போது என்னைக் கீழே படுக்கவை” என்று அப்துல்லாஹ் சொன்னார். அதன் பிறகு இருவரும் ஒருபோதும் பேசிக்கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x