Published : 28 Dec 2017 10:05 AM
Last Updated : 28 Dec 2017 10:05 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்றுப்

புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்

குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக்கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளாய்

கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!

அதாவது, ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதரித்த போது, பொல்லாத அரக்கனான ராவணனின் தலையைக் கிள்ளி எறிந்தான். கண்ணனாக அவதரித்தபோது, காகாசுரன் என்னும் அசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றான்.

இவ்வாறு, ராம - கிருஷ்ண அவதாரச் சிறப்புகளைப் பாடிக் கொண்டு, பாவைப்பெண்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்கப் புறப்பட்டு விட்டனர். வியாழன் அதாவது வியாழக்கிழமை முடிந்து வெள்ளிக்கிழமை பிறந்துவிட்டது.

பறவைகள் தன்னை சிலிர்ப்பிக் கொண்டு எழுந்து கூவுகின்றன. அழகான கண்களையுடைய பெண்ணே! இந்த நன்னாளில் மார்கழிப் பனிக்குளிரில் உள்ளமும் உடலும் குளிரும்படி நீ நீராடி பாவை நோன்பு நோற்காமல், பொய்த்தூக்கம் தூங்கும்படி, படுக்கையில் இருக்காதே. உடனே எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்க வருவாயாக! என்று கூவி அழைக்கின்றனர்.

பொல்லா ரக்கன் - அரக்கர்களீல் நல்லவர்களும் உள்ளனர். விபீஷணன் போன்றோர் அரக்கர் குலத்தில் தோன்றினாலும் குணத்தால் நல்லவர்கள். எனவே அவரைப் போன்றோரையும் மற்றும் இலங்கையில் போரில் கலந்து கொள்ளாத மற்ற பிரஜைகளையும் (அரக்கர்களையும்) அழிக்காமல் காத்து, அருளியவர் ராமபிரான். எனவேதான் ராமர் கீர்த்தி பொருந்தியவர் என்று போற்றப்படுகிறார்.

வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று. சாதாரணமாக சாமானிய மக்களின் வழக்குச் சொல், ‘வெள்ளி முளைச்சிருச்சு’ எனும் சொல்! அதாவது வெள்ளி எனும் நட்சத்திரம் கிழக்கே தோன்றியதென்றால், பொழுது விடிந்துவிட்டது என்று அர்த்தம். இது கிராமங்களில் மிகச் சாதாரணமாகக் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகங்களான தேவகுரு வியாழனும் அசுரகுரு சுக்கிரனும் கீழவானத்திலும் மேல்வானத்திலும் (மேற்கு) இருந்து பூமியின் மீது தமது ஒளியைப் பாய்ச்சுவது என்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக் கூடிய அதிசயமான வானியல் நிகழ்வு என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த அதிசயத்தைப் பார்க்கக் கூட நீ எழுந்து வரமாட்டாயோ என்று அழைப்பதாக உட்கருத்து ஒன்றும் உள்ளது.

இந்தப் பாடலை தினந்தோறும் பாடி இறைவனை வேண்டி வருபவர்களுக்கு இறைவன் அருளால், குருவின் ஞானமும் சுக்கிரனின் செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள், வாழ்வோம் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x