

கா
மாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள அம்பாளின் சன்னிதிக்கு எதிரே, ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த அம்பாள் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டவள். அம்பாளைப் பற்றிப் பல நுணுக்கமான தகவல்களை மகா பெரியவர் அளித்துள்ளார். காஞ்சி மாநகரில் இருக்கும்பொழுதெல்லாம் இக்காமாட்சி கோயிலுக்கு அவர் தவறாமல் வந்து தரிசனம் செய்வார்.
துர்வாச முனிவரால் கிருத யுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும் பரசுராமரால் திரேதா யுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும் தவுமியாசார்யாரால் துவாபர யுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும் ஆதிசங்கரரால் கலி யுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு.
காஞ்சியில் அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள்.
பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்குக் கோடி கோடியாகத் தந்தருளுவதால் ‘காமகோடி காமாட்சி’ என்று அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்துக் கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது என்பது சிறப்பாகும். காஞ்சியில் சிவாலயங்கள் பல உண்டு. அவற்றில் அம்மன் சன்னிதி கிடையாது.
இந்தக் கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னிதி. இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்னும் அரசருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவர் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டுவந்தார். இவரது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தன் மகன் கணபதியையே மன்னருக்கு மகனாகக் கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்னும் பெயருடன் அவதரித்தார். தந்தையான மன்னர் ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.
துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தால்தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னிதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்கச் செல்லும்போது மெளனமாகச் செல்ல வேண்டும்.
இத்தலத்தில் அம்பாள் தென்கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களைத் தனக்கு ஆசனமாகக்கொண்டும் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி உட்படப் பல பெயர்கள் உண்டு.
கருவறைக்குள்ளேயே மூல விக்கிரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி காட்சி அளிக்கிறாள். இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி, லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் நடுவில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது சிறப்பு. இதே நிலையில் இதேபோல் மண்டபத்தின் கீழே இருப்பதாக நம்பிக்கை உள்ளது.