Last Updated : 06 Dec, 2017 11:51 AM

 

Published : 06 Dec 2017 11:51 AM
Last Updated : 06 Dec 2017 11:51 AM

தும்பிக்கை போல் படிக்கட்டுகள்! உச்சிப்பிள்ளையார் கோயில் மகிமை!

சீராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருச்சி என்றெல்லாம் சொல்லப்படும் ஊருக்கு, இன்னொரு பெருமைக்கு உரிய பெயரும் இருக்கிறது. அது... மலைக்கோட்டை மாநகரம்!

திருச்சியின் தனித்த அடையாளத்துடன், தனித்துத் தெரியும் மலைக்கோட்டை கொள்ளை அழகு. மலைக்கோட்டை வாசலில் உள்ள மாணிக்க விநாயகரும் சரி... உச்சியில் உச்சிமலையில் உள்ள உச்சிப்பிள்ளையாரும் சரி... நடுவே... உச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள தாயுமானவ சுவாமியும் சரி... எல்லோருமே சக்தியும் சாந்நித்தியமுமாக நமக்கு அருளும் பொருளும் அள்ளித்தருபவர்கள்.

உமாதேவி, பிரம்மன், இந்திரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், சாரமா முனிவர், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளனர்.

அற்புதமான இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்கு உள்ள சிவனாரை பூஜித்து பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர் அமைந்தது. மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுகைகள், 5-&ம் நூற்றாண்டில் சமண முனிவர்களின் வசிப்பிடமாக விளங்கின. சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, ‘சிராப்பள்ளி’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் ‘திரு’ என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறியதாகவும் கூறுவர்.

10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டு உள்ளனர்.

சுமார் 16 முதல் 18&-ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ‘திரிசிரபுரம்’ என்றும், அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ‘டிரிச்சினாபள்ளி’ என்றும் வழங்கப்பட்டது. .

இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் 11 பாடல்களும், அப்பரும் மாணிக்கவாசகரும் முறையே நான்கு மற்றும் இரண்டு பாடல்களுமாக தேவாரம் பாடியுள்ளனர்.

திருக்க கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர். கயிலாய மலைக்கு தோஷம் உண்டு. அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு; அது இசைக்கு உருகிய மலை. சிரா மலைக்கு தோஷம் இல்லை. பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்று தெரிவிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்!

16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப் பட்டு வலுப்படுத்தப்பட்ட மலைக்கோட்டை, சுமார் 200 ஆண்டு காலம் பல போர்கள் ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடை பெற்ற போர்களின்போது மலைக்கோட்டை வெடிமருந்துக் கூடமாக விளங்கியது. இதற்கு அடையாளமாக மலை மீது உள்ள குகைக் கோயிலின் தரைப் பகுதியில் குழிகள் சில உள்ளன.

18-&ம் நூற்றாண்டில், அருகிலுள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்தான் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டிஷ் படைகளிடம் சரண் அடைந்தன. இங்கே பிரிட்டிஷ் படைகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்த மேஜர் லாரன்ஸின் நினைவாக, லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில், திருச்சி மலைக்கோட்டையின் படம் இடம்பெற்றுள்ளது.

கீழ்க் கோபுர வாயிலுக்கு அருகில் ஆயிரங்கால் மண்டபம் இடம்பெற்றிருந்தது. இந்த மண்டபம் 17-&ம் நூற்றாண்டில், ‘அனுப்பி’ என்ற பெண்ணால் கட்டப்பட்டது என்கிறார்கள். கோபுர வாயிலில் உள்ள தூண் ஒன்றில் அவளின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. அங்கு 1772-ல் வெடி விபத்து ஏற்பட்டதால் இந்தப் பகுதி பலத்த சேதத்துக்கு ஆளானது. பின்னரே இந்தப் பகுதி கடை வீதியானது.

1849-ல் விநாயக சதுர்த்தி விழாவில் எதிர்பாராத ஜன நெருக்கடியால், மலையில் விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதன் பின்னர், 1866-ல் இரும்புத் தண்டவாளங்கள் இரு புறத்திலும் கைப்பிடிகளாக அமைக்கப்பட்டன.

மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை. மட்டுவார்குழலம்மை சமேத ஸ்ரீதாயுமானவர் கோயில் இரண்டாம் நிலை. குடைவரைக்கோயில், உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை. இப்படி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதால், இதற்கு முத்தலை மலை என்றும் பெயர் அமைந்தது!

மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால் விநாயகர் போன்றும், வடக்கில் இருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும், தோற்றம் அளிக்கும்.

உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும். என்று வியக்கிறார்கள் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x