

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா குத்து புல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன், அவுலியாக்களின் சந்தனக் கூடு உரூஸ் மத நல்லிணக்க விழா நேற்று மாலை நடந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு உரூஸ் பிறைகொடி பாரம்பரிய ஹக்தார்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊர்வலம் மின் விளக்கு அலங்காரத்துடன் மேளதாளம் முழங்க கோரிப்பாளையம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தர்காவை அடைந்தது. அதன் பிறகு சந்தனம் பூசல் நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி தர்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இறையன்பன் குத்துாஸ், முகவை சீனி முகம்மது, ஜெய பாரதியின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடந்தது.
ஏற்பாடுகளை தர்கா நிர்வாக அறங்காவலர் பாஷல் பாஷா, டிரஸ்டிகள் சையது பாபு ஜான், சையது சம சுதீன், சையது ரசூல், சம் சுதீன் அபு, மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்.