Published : 03 Oct 2023 04:14 AM
Last Updated : 03 Oct 2023 04:14 AM

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: தூய்மையாக பராமரிக்க வலியுறுத்தல்

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்.படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில் கடந்த சில நாட்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

கோட்டை நுழைவு வாயில், மலைக்கோட்டை ஆகியவற்றை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு முகம் சுழித்தவாறு தெப்பக்குளத்தை கடந்து செல்கின்றனர்.

எனவே, தெப்பக்குளத்தில் இறந்து மிதக்கும் மீன்களையும், கழிவுகளையும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தெப்பக்குளத்தை தூய்மையாக பராமரித்து மேம்படுத்த வேண்டும் என அப்பகுதியில் உள்ள வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, நோய் தாக்குதல் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம். நீரில் ஆக்சிஜன் அளவு குறைவு, விஷத்தன்மை ஏதேனும் இருந்தால் குளத்தில் அதிகளவில் மீன்கள் இறந்திருக்கும். இருப்பினும், மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பகுதியில் சிலர் கம்பி வலை தடுப்புகளையும் மீறி தெப்பக்குளத்தில் காய்கறி, பழங்கள் கழிவுகள், குப்பை கொட்டுகின்றனர். இதனால், நீர் அசுத்தமாகிறது. எங்களது கவனத்துக்கு தெரிந்தால் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெப்பக்குளத்தை தூய்மையாக பராமரிக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x